குப்பைக்கு போன ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள் - ஒரு மாதத்தில் மறந்துபோன நிர்வாகிகள்…

First Published Jan 2, 2017, 10:45 AM IST
Highlights


இரும்புப் பெண்மணி என்று அனைவராலும் போற்றப்படுபவர் ஜெயலலிதா. தமிழகத்தில் ஏழை,எளிய மக்களுக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள் யாராலும் மறக்கமுடியாதவை..

ஆனால் இன்று அவரையே மறந்து போய்விட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் உச்சகட்டம்தான் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்ட புதிய காலண்டர்கள் இன்று குப்பையில் கிடக்கின்றன.

பொதுவாக புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பாக ஜெயலலிதாவின் படம் போட்ட காலண்டர்களை அச்சிட்ட பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் விநியோகம் செய்ய அமைச்சர்கள், வாரிய தலைவர்கள்,எம்.பி க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவும்.

அப்படித்தான் இந்த ஆண்டும் ஜெயலலிதா படம் போட்ட லட்சக்கணக்கான காலண்டாகள் அச்சிட கழக நிர்வாகிகள் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்டர்கள் கொடுத்திருந்தனர்.

ஆனால் டிசம்பர் 5 ஆம் தேதியே ஜெயலலிதா இறந்து விட்டதால் அந்த காலண்டர்களுக்கு அவசியம் இல்லாமல் போயிற்று. பெரும்பாலான நிர்வாகிகள் அப்போதே அச்சடிக்க கொடுத்த ஆர்டர்களை கேன்சல் செய்துவிட்டனர்.

அப்படி கேன்சல் செய்ய முடியாமல் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்ட காலண்டர்கள் தான் தற்போது குப்பைத் தொட்டியில் கேட்பாரற்று கிடக்கின்றன.

எத்தனையோ பேருக்கு வாழ்வளித்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் போட்ட காலண்டர்களின் நிலைமையை நினைத்து அடிமட்டத் தொண்டர்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

click me!