ரெயில்வேயிலும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம்..!!! மூன்றாம் பாலினமாக சேர்ப்பு

First Published Nov 27, 2016, 4:59 PM IST
Highlights


ரெயில்வே துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் ஆகியவை திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து, டிக்கெட் முன்பதிவு மற்றும் நீக்கம் படிவத்தில் அவர்களின் பாலினத்தைச் சேர்ந்துள்ளது.

டெல்லி வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முன்பதிவு மற்றும் நீக்கம் வசதியில் திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரமும், உரிமையும் கிடைத்துள்ளது.

திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஆனால், இந்த நடைமுறை அரசுத்துறைகளில் கூட பல இடங்களில் பின்பற்றப்படவில்லை. இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜாம்ஷெட் அன்சாரி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில்உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்துள்ளது. ஆனால், ரெயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனங்களில் அவர்களுக்கு என்று டிக்கெட் முன்பதிவு  விண்ணப்பத்தில் தனி ஒதுக்கீடு இல்லை. இது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14, 15, 19 மற்றும் 21 மீறும் செயலாகும்.

ஆதலால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மாநில அரசுகளிலும், மத்திய அரசின் நிறுவனங்களிலும் திருநங்கைகளுக்கு உரிய பிரதிநிதித்துவம், உரிமை, அளிக்க மூன்றாம் பாலினமாக சேர்க்க உத்தரவிட வேண்டும். இவர்களுக்கு என தனிப்பட்ட பெட்டிகள், முன்பதிவு இடங்கள், பாதுகாப்பு ஆகியவற்றை அனைத்து ரெயில்களிலும் இருக்குமாறு உத்தரவிட வேண்டும் என  கோரியிருந்தார்.

இந்த மனுவை தலைமைநீதிபதி ஜி.ரோகினி தலைமையிலான அமர்வு, ரெயில்வே துறை இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, கடந்த இரு நாட்களுக்கு முன், ரெயில்வேதுறை அமைச்சகம்,  ரெயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, திருநங்கைகளை மூன்றாம் பாலினமாகச் சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே துறை அனுப்பிய சுற்றறிக்கையில், “ உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து, ரெயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி. ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆதலால், ரெயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி. ஆகியவை டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் படிவத்தில் மூன்றாம் பாலினம்  என்று சேர்க்க வேண்டும். அதேபோல, அன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து  வசதி  செய்யப்பட வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!