அசுத்தம் செய்தால் ரூ. 50 ஆயிரம் அபராதம்… எங்கே தெரியுமா?

First Published Jul 13, 2017, 9:28 PM IST
Highlights
The National Green Tribunal has recommended imposing penalties of up to 50 thousand rupees for the garbage of Haridwar area in the Ganga river


கங்கை நதியில் ஹரித்வார் பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்த தலைமை நீதிபதி சுதந்திர குமார் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அரசுக்கு பல்வேறு கடுமையான பரிந்துரைகளைச் செய்துள்ளது.

அந்த பரிந்துரைகளின் விபரம் வருமாறு-

கங்கை நதியில் ஹரித்துவார் –உன்னா பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும்.

கங்கை நதியின் அப்பகுதியில் நதிக்கரையின் 500 மீட்டர் தொலைவு வரை குப்பைகளைக் கொட்ட அனுமதிக்க கூடாது. மேலும் கங்கையின் அப் பகுதியில் கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவுவரை வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாத பகுதியாக அறிவிக்க வேண்டும்.

கங்கை மற்றும் அதன் உப நதிகளில் சமய சடங்குகள் நடத்த உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநில அரசுகள் உரிய விதிமுறைகளை வகுத்திட வேண்டும்.

உன்னோ வரை கங்கை நதி ஓரத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரப்பிரதேச அரசு 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்த 2 வருடங்களுக்குள் கங்கை நதியில் கலக்கும் கழிவு நீரை சுத்தம் செய்யும் வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்தி்ட வேண்டும்.

கங்கை நதியின் தொடக்கம் முதல் முடியும் வரை , கரையோரம் உள்ள தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை வரைமுறையின்றி பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தவேண்டும்.

கங்கை நதியை தூய்மைப்படுத்த பல்வேறு பகுதிகளாக பிரித்து செயல்படவேண்டும்.

இவை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அது வெளியிட்டுள்ள 543 பக்க அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்த கண்காணிப்பு கமிட்டி ஒன்றையும் அமைத்துள்ளது.

மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான இந்த கமிட்டியில் ஐஐடி பேராசிரியர்களும் இடம் பெறுவர். பசுமைத் தீர்ப்பாயத்தின் பரிந்துரைகள் அமலாக்கப்படுகிறதா என்பது குறித்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த கமிட்டி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலப்பதுதான் கங்கை நதி நீர் மாசடைய முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கை நதியோரம் உள்ள, பிரிட்டிஷ் காலத்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளை கான்பூருக்கு இடமாற்றம் செய்ய உ.பி. அரசு விருப்பம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!