செக்ஸ் டார்ச்சர்! பதவி விலகிய பெண் நீதிபதிக்கு 8 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பணி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By manimegalai aFirst Published Feb 11, 2022, 11:52 AM IST
Highlights

கடந்த 2014-ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக குற்றம்சாட்டி தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்த பெண் அதிகாரிக்கு, 8 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பதவி வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
 

கடந்த 2014-ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக குற்றம்சாட்டி தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்த பெண் அதிகாரிக்கு, 8 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பதவி வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு தான் பணியாற்றிய மத்தியப்பிரதேசம் குவாலியரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் நீதிபதியாக அந்த பெண் அதிகாரியை பணிஅமர்த்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரில் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் பணியில் இருந்த பெண் நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி அளித்த புகாரில்  “ தன்னை ஒரு கொச்சையான பாடலுக்கு நடனமாடுமாறு உயர் நீதிமன்ற நீதிபதி கூறினார், இதற்கு நான் மறுத்துவிட்டேன். என்னை 500கி.மீ தொலைவில் உள்ள ஒரு இடத்துக்கு என்னை இடமாற்றம் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனக்கு 12ம் வகுப்பு பயிலும் மகள் இருக்கிறார்.” என்று குற்றம்சாட்டினார். 

இது தொடர்பாக அந்த பெண் நீதிபதி புகார் அளித்தும் அந்த உயர் நீதிமன்ற நீதிபதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் விசாரணைக் குழு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் எந்தவிதமான குற்றச்சாட்டும் ஆதாரப்பூர்வமாக இல்லை எனத் தெரிவித்தது. 

தனக்கு நீதி கேட்டு,   கடந்த 2014-ம் ஆண்டு குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.  

அதன்பின் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பெண் நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமா கடிதத்தை அடுத்த 2 நாட்களில் மத்தியப்பிரேச உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

இந்நிலையில் தனக்கு மீண்டும் பதவி வழங்கிட வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்குத் தொடர்ந்திருந்தார். 
இந்த வழக்கை விசாரி்த்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பிஆர் காவே அடங்கிய அமர்வு நேற்று 86 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியது. அதில் “ அந்த பெண் நீதிபதி கடந்த 2014ம் ஆண்டு அவரின் பதவியை ராஜினாமா செய்ததையும், அதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையும் ரத்து செய்கிறோம்.

 அந்த பெண் நீதிபதி நிர்பந்தம், சூழல் காரணமாக ராஜினாமா செய்துள்ளார், தாமாக முன்வந்து பதவிலியிலிருந்து இறங்கினார் என்பதை ஏற்க முடியாது. ஆதலால், அந்த பெண்ணுக்கு மீண்டும் குவாலியர் நகரில் மாவட்ட கூடுதல் நீதிபதியாக பதவி வழங்கிட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுகிறோம். 

இத்தனை ஆண்டுகளாக அவர் பதவியில் இல்லாத காலத்துக்கான ஊதியம் கிடைக்காது” எனத் தீர்ப்பளித்தனர்.

click me!