ரேபரேலி தொகுதியை குடும்ப சொத்தாக நினைக்கிறார்கள் என சோனியா காந்தியை பிரதமர் மோடி சாடினார்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான ரேபரேலி தொகுதியின் சிட்டிங் எம்.பி.யான சோனியா காந்தி, ராஜ்யசபாவுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வாகியுள்ளார். வயது மூப்பு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால், நீண்ட இழுபறிக்கு பின்னர் அந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியோடு சேர்த்து உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். காங்கிரஸ் தொண்டர்களும் ரேபரேலி தொகுதியில் காந்தி குடும்பத்தினரே போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ராகுல் காந்தி அங்கு களம் கண்டுள்ளார்.
undefined
இந்த நிலையில், ரேபரேலி தொகுதியை குடும்ப சொத்தாக நினைக்கிறார்கள் என சோனியா காந்தியை பிரதமர் மோடி சாடினார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “ரேபரேலியை கைவிட்ட சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தியை அங்கு பரிந்துரை செய்துள்ளார்.ரேபரேலியில் பிரச்சாரம் செய்த அவர், தனது மகனை அந்த தொகுதி மக்களிடம் ஒப்படைப்பதாக கூறினார். ரேபரேலியில் நீண்ட காலமாக பணியாற்றிய ஒரு காங்கிரஸ் கட்சிக்காரரும் கூட அவருக்கு தெரியவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.
சோனியா காந்தி கொரோனாவிற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை என்ற பிரதமர் மோடி, இப்போது அவர் தனது மகனுக்காக வாக்கு சேகரிக்க அங்கு சென்றுள்ளார். அவர்கள் அந்த இடத்தை தங்கள் குடும்பச் சொத்தாக நினைக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
அதேபோல், இரண்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் காந்தியை பிரதமர் மோடி கடுமையாக சாடினார். “காங்கிரஸ் இளவரசர் தேர்தலில் போட்டியிட வயநாடு, ரேபரேலியில் போட்டியிடுகிறார். இது என் அம்மாவின் சீட் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிகிறார். எட்டு வயது குழந்தை தான் படிக்கும் பள்ளியில் அக்குழந்தையின் அப்பா படித்திருந்தாலும் இது எனது அப்பாவின் பள்ளீ என்று சொல்வதில்லை. இந்த குடும்பம் சார்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு உயில் எழுதுகிறார்கள். இதுபோன்ற குடும்ப கட்சிகளிடம் இருந்து ஜார்கண்ட் பாதுகாக்கப்பட வேண்டும்.” என பிரதமர் மோடி கூறினார்.
தேர்தல் நேரத்து சோதனைகள்: ரூ.9000 கோடியை நெருங்கும் பறிமுதல் - தேர்தல் ஆணையம் தகவல்!
முன்னதாக, ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சோனியா காந்தி வாக்கு சேகரித்தார். இதற்கு முன்பு எந்த தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்யவில்லை. ரேபரேலியில் முதன்முறையாக பிரசாரம் செய்த சோனியா காந்தி, தனது குழந்தைகள் ராகுல் மற்றும் பிரியங்காவுடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தனது மகனை (ராகுல் காந்தி) ரேபரேலியிடம் ஒப்படைப்பதாகவும், அவர் ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டார் எனவும் கூறினார்.
ரேபரேலி தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக எம்.பியாக பதவி வகித்துள்ளார் சோனியா காந்தி. அதற்கு முன்பு 12 முறை காங்கிரஸ் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்று 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். நாடு சுதந்திரமடைந்த பின்னர் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.