சாய்பாபா கோயில் உண்டியலில் ரூ.2.28 கோடிக்கு செல்லாத நோட்டு

First Published Dec 4, 2016, 4:38 PM IST
Highlights


மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஷீர்டி சாய்பாபா கோயில் உண்டியலில், செல்லாத, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ.2.28 கோடிக்கு வந்துள்ளன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதைத்தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள பழைய  ரூபாய் நோட்டுகளை கோயில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது.

இதையடுத்து, ஷீர்டி கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், பழைய ரூபாய் நோட்டுகளை கோயில் உண்டியல்களிலும், நன்கொடையாகப் பெறுவதையும் நிறுத்தக் கோரினர். இதையடுத்து கடந்த மாதம் 24-ந்தேதியோடு செல்லாத ரூபாய்களைப் பெறுவதை கோயில் நிர்வாகம் நிறுத்திவிட்டது. 

இது குறித்து ஷீர்டி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் அமைப்பின் நிர்வாக அதிகாரி பஜிரோ ஷின்டே கூறுகையில், “ கடந்த மாதம் 24-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து எனக்கு கடிதம் கிடைத்தது. அதன்பின், பழைய ரூபாய் நோட்டுகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்த வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டோம்.

இதில் கடந்த மாதம் 8-ந்தேதியில் இருந்து நவம்பர் 24-ந்தேதி வரை உண்டியலில் பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகள் மட்டும் ரூ.1.57 கோடிக்கு இருந்தது. ஆனால், மக்கள் தொடர்ந்து பழைய ரூபாய்களை டெபாசிட் செய்து வந்தததால்,  கூடுதலாக ரூ.71 லட்சம் பழைய நோட்டுகள் வந்துள்ளன. இந்த பணத்தை என்ன செய்வது என்பது குறித்து வருமான வரித்துறை கேட்டுள்ளோம். அவர்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.

click me!