மனைவியின் சடலத்துடன் வங்கியின் முன் போராட்டம் நடத்திய முதியவர்....

First Published Dec 1, 2016, 10:35 AM IST
Highlights


உத்தரப்பிரதேசம், நொய்டாவில் மனைவியின் உடலை அடக்கம் செய்ய வங்கியில் இருந்து பணம் எடுக்க 3 நாட்களாக அலைக்கழிக்கப்பட்டதால், விரக்தி அடைந்த முதியவர் உடலுடன் வங்கி அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

மனைவி மரணம்

 நொய்டா செக்டார்9 பகுதியைச் சேர்ந்தவர் முன்னி லால்(வயத65). இவர் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார். இவரின் மனைவி பூல்மதி(வயது62). கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர், திங்கள்கிழமை திடீரென உயிரிழந்தார்.

பணம் கிடைக்கவில்லை

இந்நிலையில், முன்னிலால் தான் கணக்கு வைத்து இருக்கும் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ஈமச்சடங்குக்கு ரூ. 15 ஆயிரம் எடுக்கச் சென்றார். ஆனால், திங்கள்கிழமை முழுவதும் வரிசையில் நின்றும், முன்னி லாலால் வங்கியில் இருந்து  பணம் எடுக்க முடியவில்லை.

 தன்னுடைய உறவினர்கள், நண்பர்களிடமும் பணஉதவி கேட்டு முன்னி லால் அலைந்தார். அனைவரும் பணம் இல்லை என தெரிவித்ததால்,  செவ்வாய்கிழமையும் வங்கியில் வரிசையில் பணத்துக்காக நின்றார். நண்பகல் வரை நின்றும் முன்னி லாலால் பணம் எடுக்க முடியவில்லை.

போராட்டம்

இதையடுத்து மாலையில், மனைவியின் உடலுடன்  முன்னிலால், மற்றும் அவரின் குடும்பத்தினர் வங்கி முன் போராட்டம் செய்தபின், வங்கி அதிகாரிகள் பணத்தை அளித்தனர், மாலையில், பிணத்தை அடக்கம் செய்வது தங்களின் சமூகத்துக்கு மாறானது என்பதால், நேற்று அடக்கம் செய்தார்.

கோரிக்கை ஏற்கவில்லை

இது குறித்து முன்னிலால் கூறுகையில், “ திங்கள்கிழமை வங்கியின் முன் 3மணிநேரம் வரிசையில் நின்றபின், என் மனைவியின் ஈமச்சடங்குக்காக  என் வங்கிக்கணக்கில் இருந்து பணம் கொடுங்கள் என வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோதும் மறுத்துவிட்டனர். என் வேண்டு கோளை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. செவ்வாய்கிழமையும் இதுபோல் வங்கி அதிகாரிகளிடம் கேட்டும் கொடுக்க மறுத்தனர். அதன்பின் மனைவி உடலுடன் போராட்டம் நடத்தியதைப் பார்த்து, ஊடகங்களும், உள்ளூர் அரசியல்வாதிகளும் வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்தபின், எனக்கு  ரூ.15 ஆயிரத்தை வங்கி மேலாளர் கொடுத்தார்'' என்றார்.

வங்கி மேலாளர் சுசுபால் கூறுகையில், “ திங்கள்கிழமை விரைவாக வங்கியில் பணம் தீர்ந்துவிட்டதால் கொடுக்கமுடியவில்லை. ஆனால், செவ்வாய்கிழமை பணத்தை முதியவரிடம் கொடுத்துவிட்டோம்'' என்றார்.

பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் உண்டான பணப்பற்றாக்குறை,  சாமானிய மக்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது, என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே சாட்சியாகும்.

click me!