சமாஜ்வாடி கட்சி உடையுமா?...முலாயம்- அகிலேஷ் போட்டி கூட்டங்களுக்கு ஏற்பாடு

First Published Dec 31, 2016, 7:38 AM IST
Highlights


சமாஜ்வாடி கட்சி உடையுமா?...முலாயம்- அகிலேஷ் போட்டி கூட்டங்களுக்கு ஏற்பாடு

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். அரசின் முக்‍கிய அமைச்சர்களாக அகிலேஷ் குடும்பத்தினர் உள்ளனர்.

இந்நிலையில், குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பதவி போட்டி காரணமாக, அகிலேஷுக்‍கும், தந்தை முலாயமுக்‍கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கடந்த இரு மாதங்களுக்‍கும் மேலாக இருதரப்பினரும் கடும் மோதலில் இருந்தனர். குடும்பத்தினரை ஒன்றுபடுத்தி, கட்சியை ஒன்றுபடுத்த முலாயம் எடுத்த நடவடிக்‍கைகள் பலனளிக்‍கவில்லை.

இதனிடையே, புத்தாண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முலாயம்சிங் வெளியிட்டார். இதில் தனது ஆதரவாளர்கள் இடம் பெறாததால், தனியாக வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவும் வெளியிட்டார். இதனால் தந்தைக்‍கும், மகனுக்‍கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்தது.

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளரும், உறவினருமான ராம்கோபால் ஆகியோரை முலாயம் சிங் சமாஜ் வாடி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்‍கு அதிரடியாக நீக்கினார். 

இதையடுத்து, இரு கோஷ்டிகளும் தங்கள் பலத்தை காட்டும் வேலையில் இறங்கியுள்ளனர். முலாயம் சிங் யாதவிடம் இருந்து கட்சியை கைப்பற்றும் விதமாக அகிலேஷ் யாதவ் தேசிய பிரதிநிதிகள் கூட்டத்தை நாளை அவசரமாக கூட்டி இருக்கிறார். லோகியா சட்ட பல்கலைக்கழகத்தில் நாளை காலை 11 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை  கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் வெளியிட்டார்.

அதே நேரத்தில் மகனுக்கு போட்டியாக, முலாயம்சிங்கும், தான் அறிவித்த 393 வேட்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தை இன்று நடத்துகிறார். இந்த மோதலால், சமாஜ்வாடி கட்சி எந்த நேரத்திலும் உடையும் சூழ்நிலை ஏற்பட்டது.

 

click me!