பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி!

By Manikanda Prabu  |  First Published Apr 29, 2024, 4:15 PM IST

பிரதமர் மோடி ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டு வருகிறார். இந்த பிரசாரத்தின்போது, கடவுள் மற்றும் கடவுள் வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றின் பெயரால் பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மதம் மற்றும் கடவுள் வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றின் பெயரால் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பதாக கூறி அவரை ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர்  மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

அதில், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போது, ராமர் கோயிலை கட்டியதாகவும், கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தை உருவாக்கியதாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து குரு கிரந்த சாஹிப்பின் பிரதிகளை கொண்டு வந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார். இதன் அடிப்படையில், மத தெய்வங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பெயர்களில் வாக்குகளை சேகரித்து தேர்தல் விதிமுறைகளை மீறியதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்திருந்தேன். ஆனால், தேர்தல் ஆணையம் அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பிரதமர் மோடி ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.” என கோரப்பட்டிருந்தது.

இந்தியா கூட்டணி ஆட்சியமைந்தால் ஸ்டாலின் பிரதமர் - அமித் ஷா கருத்து!

இந்த மனுவானது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டைப் பிளவுபடுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான பேச்சு என மனுதாரர் தரப்பு வாதிட்டது. அதேபோல், தேர்தல் ஆணையம் ஒரு அரசியலமைப்பு அமைப்பு. தினமும் இதுபோன்ற புகார்கள் வருகின்றன. மனுதாரரின் புகாரை ஆணையம் சட்டத்தின்படி விசாரிக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தாந்த் குமார் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், இதுபோன்ற விவகாரங்களில் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என சுட்டிக்காட்டி, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி மனுவை தல்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

click me!