Bengaluru Temperature 50 ஆண்டுகளில் இரண்டாவது வெப்பமான நாளை பதிவு செய்த பெங்களூரு!

By Manikanda Prabu  |  First Published Apr 29, 2024, 4:47 PM IST

கர்நாடகத் தலைநகர் பெங்களூரு 50 ஆண்டுகளில் இரண்டாவது வெப்பமான நாளை பதிவு செய்துள்ளது


நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, குளிர்ந்த காலநிலைக்கு பெயர் பெற்ற கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே அங்கு தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடி வரும் நிலையில், வெப்ப தலைநகராக பெங்களூரு மாறி வருகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம், கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது வெப்பமான நாளை கர்நாடகத் தலைநகர் பெங்களூரு பதிவு செய்துள்ளது.

பெங்களூரு வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இதற்கு முன்பு கடந்த 2016ஆம் ஆண்டில் பெங்களூருவின் வெப்பநிலை 39.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி (நேற்று) பெங்களூருவின் வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. ஏப்ரல் 27ஆம் தேதியன்று 37.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பெங்களூருவில் பதிவாகியுள்ளது. அதன்படி, சாதாரண அதிகபட்ச வெப்பநிலையிலிருந்து 3.3 டிகிரி செல்சியஸ் கணிசமாக உயர்ந்துள்ளது.

Tap to resize

Latest Videos

நடப்பாண்டு வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையில் பெங்களூரு சிக்கித்தவித்து வருகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் வரலாறு காணாத வெப்பம் காணப்பட்டது. மார்ச் 30ஆம் தேதி 36.6 டிகிரி செல்சியஸாக இருந்த வெப்பநிலை, மார்ச் 31ஆம் தேதி 37 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்தது, இது சமீபத்திய வெப்பமான மார்ச் மாதங்களில் ஒன்றாகும். பிப்ரவரி மாதம் கூட பெங்களூருவின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. இது பெங்களூருவில் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய ஏப்ரல் மாதம் வரை நீண்ட காலமாக மழை பெய்யாததால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் கலாபுராகி போன்ற பகுதிகளில் கூட வெப்பநிலை குறைந்துள்ளது. கலாபுராகியில் சனிக்கிழமை வெப்பநிலை 42.4 டிகிரி செல்சியஸாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று 40.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் கூறுகின்றன.

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி!

அதேசமயம், ஏப்ரல் 30ஆம் தேதி வரை பெங்களூருவில் வறண்ட வானிலையே நிலவும் எனவும், வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கர்நாடகாவின் பிதார், கலாபுராகி, யாத்கிரி மற்றும் பிற பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதேபோல், பெங்களூருவில் மே 1, 2 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது கடுமையான வெப்பத்திலிருந்து பெங்களூரு வாசிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழையுடன் ஓரளவு மேகமூட்டமான வானத்தை எதிர்பார்க்கலாம். மே 1 ஆம் தேதி 23 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், மே 2 ஆம் தேதி 23 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!