சுங்கச் சாவடிகளில் ராணுவம் குவிப்பு : தலைமைச் செயலகத்தில் மம்தா பானர்ஜி போராட்டம்!

First Published Dec 2, 2016, 11:07 AM IST
Highlights


மேற்குவங்க அரசாங்கம் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், சுங்கச் சாவடி மற்றும் தலைமை செயலத்திற்கு அருகே ராணுவம் குவிக்கப்பட்டதாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

 

இதுதொடர்பாக கொல்கத்தாவில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மம்தா, ‘‘பால்சிட் மற்றும் தங்குனி ஆகிய சுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எமர்ஜென்சியை விட இது மிகவும் மோசமாக சூழ்நிலை" என்று தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் விதமாக, எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ராணுவத்தினர் மேற்குவங்கத்தில் குவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். மத்திய அரசு தனக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, அவசரநிலையில் இருப்பது போன்ற சூழலை மேற்குவங்கத்தின் மீது திணிப்பதாகவும் மம்தா பானர்ஜி விமர்சித்தார். மக்களையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் விதமாக, தலைமைச் செயலகத்திலேயே இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் மம்தா அதிரடியாக அறிவித்தார்.  

 

ராணுவம் மறுப்பு:

 

ஆனால், மம்தா கூறும் குற்றச்சாட்டுகளை மறுத்த ராணுவ செய்தி தொடர்பாளர், இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சோதனை ஒத்திகை தான் என்று விளக்கமளித்துள்ளார். சுங்கச் சாவடிகளுக்கு வரும் கனரக வாகனங்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காகவே, ராணுவத்தினர் குவிக்கப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை அடுத்த ஓரிரு நாட்களுக்கு மேற்குவங்கத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

இதனிடையே, மேற்குவங்க தலைமைச் செயலகம் அமைந்துள்ள நபன்னோ பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தினர், நள்ளிரவுக்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டனர். 

click me!