ஐஏஸ் அதிகாரிகள் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு - ரூ.4 கோடி சிக்கியது

First Published Dec 2, 2016, 9:35 AM IST
Highlights


பெங்களூரு நகரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது, இருவரிடமிருந்து மொத்தம் ரூ.4 கோடி மதிப்புள்ள புதிய ரூ.500 மற்றும் ரூ. 2000 நோட்டு கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 7 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரூ. 4 கோடி பறிமுதல்

பெங்களூரில் நேற்று முன் தினமும் நேற்றும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கர்நாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையாவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் வீட்டிலும்கூட சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அரசு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் இரு பொறியாளகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது மொத்தம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. மேலும் சோதனையின் போது 7 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் கூறினர்.

40 இடங்களில் சோதனை

சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரிடமிருந்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவல் முழுமையாக வெளியிடப்படவில்லை.

இதே போல் தமிழகத்தில் சென்னை, ஈரோடு உள்பட நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர். அப்போது கொல்கத்தாவில் ஒரு இடத்தில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. மற்ற இடங்கள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 1 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவ.8 க்கு பிறகு முதல் முறை

ஆனால் பெங்களூரில் இருவருக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து மட்டுமே ரூ. 4 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நவம்பர் 8-ம் ேததி பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு இவ்வளவு பெரிய தொகை புதிய ரூபாய் நோட்டுகளாக பிடிபடுவது இதுவே முதல் முறை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பண முதலைகள் முயற்சி

மக்கள் ஒன்று அல்லது இரண்டு புதிய நோட்டுக்களை கூட வாங்க முடியாமல் வங்கி வாசல்களில் வரிசையில் நின்று தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வளவு கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி இரு நபர்களிடமிருந்து பிடிபட்டது என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளையும் கருப்பு பணமாக பதுக்கும் முயற்சிகளை பண முதலைகள் தொடங்கி விட்டதையே இச்சம்பவம் காட்டுகிறது.

click me!