இந்திய போர் விமானம் நொறுங்கி விழுந்த இடம் கண்டுபிடிப்பு

First Published May 26, 2017, 4:53 PM IST
Highlights
Founded the place where Indian war plane crashed


சீன எல்லையில் இரு விமானிகளுடன் மாயமான இந்திய போர் விமானம் நொறுங்கி விழுந்த இடம் கண்டறியப்பட்டு உள்ளது. மோசமான வானிலை மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி என்பதால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

சுகோய் விமானம்

சீனாவின் எல்லைப் பகுதியில், அசாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து இந்திய போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுகோய்-30 ரக போர் விமானம், இரு விமானிகளுடன் பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் பகல் 11.10 மணி அளவில் அந்த விமானம் ரேடாரின் கட்டுப்பாட்டை இழந்து மாயமானது.

தேடுதல் பணி

ரேடார் இணைப்பை இழந்த பகுதி சர்ச்சைக்குரிய சீன எல்லையாகும். எனவே விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது வேறு காரணங்களுக்காக தரை இறக்கப்பட்டதா? என விசாரணை நடைபெற்று வந்தது. மாயமான விமானத்தை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது.

நொறுங்கி விழுந்த இடம்

இந்த நிலையில், விமானம் மாயமான இடமான தேஜ்பூரில் இருந்து வட மேற்கில் 60 கிலோ மீட்டர் தூரத்தில் அந்த விமானம் நொறுங்கி விழுந்து கிடப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அருணாசலப் பிரதேச மாநிலம், கோமங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் சிதறிக்கிடக்கின்றன. இந்த தகவலை தேஜ்பூர் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் சோம்பிட் கோஷ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மோசமான வானிலை

அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவி வருவதாலும், அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் மீட்பு படையினரால் உடனடியாக அந்த இடத்திற்கு செல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

மீட்பு பணிகள் முடிந்தபிறகுதான், விமானத்தில் இருந்த இரு விமானிகளுடைய நிலை பற்றிய தகவல் தெரியவரும். இரு விமானிகளில் ஒருவர் விமானப்படை அதிகாரி என்றும் மற்றொருவர் விமானி என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அவர்களுடைய பெயர் விவரம் அறிவிக்கப்படவில்லை.

click me!