மோடி கையால் பரிசு வாங்கிய ஆசாமி - கள்ளநோட்டு அடித்த வழக்கில் கைது

First Published Dec 3, 2016, 4:38 PM IST
Highlights


பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட பொறியாளர் ஒருவர், புதிய 2 ஆயிரம் நோட்டுகளை, ரூ. 80 லட்சத்துக்கு கள்ளத்தனமாக அச்சடித்து விலை உயர்ந்த ‘ஆடி’ சொகுசு கார் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

மோடி பாராட்டு

பஞ்சாப் மாநிலம், மொஹாலி, தாகோலி பகுதியைச் சேர்ந்தவர் அபினவ் வர்மா(வயது21). இவர் சிட்காரா பல்கலையில் பொறியியல் படிப்பு முடித்து, பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் ‘சென்சார்’ உதவி ஊன்று கோலை கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புக்காக பிரதமர் மோடியால் கடந்த 2015-ம் ஆண்டு டெல்லியில் நடந்த அறிவியல் மாநாட்டில் பாராட்டப்பட்டார்.

கள்ளநோட்டு

இந்நிலையில், சண்டிகார் நகரில் உள்ள தொழிற்பேட்டையில் ‘லைவ் பிரைய்லி’ என்ற நிறுவனத்தையும் அபினவ் வர்மா நடத்தி வருகிறார். அங்கு தனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல்,  அபினவ் வர்மா அச்சடிக்கும் நவீன எந்திரம், ஸ்கேனிங் எந்திரம் ஆகியவற்றை பயன்படுத்தி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வந்துள்ளார்.

கமிஷன்
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்கு பின், கருப்பு பணம் வைத்து இருப்பவர்களுக்கு கமிஷன் அடிப்படையில் தான் வைத்திருக்கும் கள்ள நோட்டுகளை அபினவ் வர்மா சப்ளை செய்து வந்தார். இதற்கு தனது உறவினர் விசாக வர்மா(வயது23),லூதியானாவைச் சேர்ந்த நிலத்தரகர் சுமன் நாக்பால்(வயது54) ஆகியோரைப் பயன்படுத்தி, 30 சதவீத கமிஷனில் பணம் மாற்றி வந்தார். 

கைது
ஆனால், அபினவ் வர்மாவிடம் பணம் பெற்றவர்கள் கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தவுடன் போலீசிடம் புகார் செய்தனர். இதையடுத்து, அபிவனவ் வர்மா மற்றும் அவர்களின் கூட்டாளிகளை போலீசார் தொடர்ந்து வந்து நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ. 45 லட்சம் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகளை கைப்பற்றினர். 



சொகுசு கார்

இதுகுறித்து, சோஹானா நகர போலீஸ் ஆய்வாளர் எச்.எஸ். பால் கூறுகையில், “ மத்திய அரசு ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வெளியான பின், அபினவ் வர்மா தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, கமிஷன் அடிப்படையில், ரூ1000,ரூ500 நோட்டுகளை மாற்றி, தன்னிடம் இருக்கும் கள்ளநோட்டுகளை அளித்துள்ளார்.இதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அபினவ், ரூ.20 லட்சத்துக்கு ஆடிக் கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். அந்த காரில் அதிகாரிகள் பயன்படுத்தும் சிவப்பு விளக்கையும் பயன்படுத்தி வலம் வந்துள்ளார். 

இந்த கள்ளநோட்டு விவகாரத்தில் இன்னும் பலருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம். அபினவுக்கு உதவிய இரு டிரைவர்களைத் தேடி வருகிறோம். கைது செய்யப்பட்ட அபினவ் உள்ளிட்ட 3 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்'' என்று தெரிவித்தார்.

click me!