வங்கிகளில் டெபாசிட்; கடனுக்கான வட்டி குறையுமா?

First Published Nov 29, 2016, 10:06 AM IST
Highlights


ரூ. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தபின், மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய்களை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

இதனால்,  வங்கிகளில் டெபாசிட் அதிகரித்துள்ளதால், கடனுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, கடந்த இரண்டு வாரங்களில் ரூ. 60, ஆயிரம் கோடி முதல் ரூ. 1.25 லட்சம் கோடி வரையிலான தொகையை வங்கிகள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்துள்ளன. இந்த தொகைக்கு வங்கிகளுக்கு 5.75 சதவீதம் ரிவர்ஸ் ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும்.

இதுதவிர, பொதுத்துறை வங்கிகள் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலும், தனியார் வங்கிகள் ரூ. 6 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலும் அரசு கடன் பத்திரங்களை வாங்கியுள்ளன. வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை அதிகரித்ததே இதற்கு காரணம்.

 இந்தத் தொகையை கடனாகவோ, அல்லது வேறு வழிமுறைகளிலோ மீண்டும் புழக்கத்தில் விட முடியாத நிலையில் வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுத்தன.

கடன் பத்திரங்கள் அதிகப்படியாக விற்பனையானதால், அதற்கு கிடைக்கும் வட்டி குறைந்தது. எனவே, இவற்றை தவிர்க்கும் விதத்தில் ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி கடந்த 26-ந் தேதி உயர்த்தியது. முன்பு இது 4 சதவீதமாக இருந்தது.

இதன்மூலம் வங்கிகள் கூடுதல் தொகையை ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ரொக்க இருப்பு விகிதத்திற்கு வட்டி கிடையாது என்பது கவனிக்கத் தக்கது.

டிசம்பர் 7-ந்தேதி நடக்கும் ரிசர்வ் வங்கியின் மறுசீராய்வு கூட்டத்தில் வீடு, வாகனம் ஆகியவற்றுக்கான கடனுக்கான வட்டி குறைப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

click me!