"வச்சிட்டாங்கல்ல அடுத்த ஆப்பு...!!" - மாதம் 10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதியாம்

First Published Nov 30, 2016, 10:47 AM IST
Highlights


பிரதமரின் ஜன் தன் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளனர். மாதம் ரூ. 10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மோடி பிரதமர் ஆனதும், வங்கிக் கணக்குஇல்லாத ஏழை மக்களையும் வங்கி செயல்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் இது. இப்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் முடக்கப்பட்டு மக்கள் அனைவரும் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜன் தன் யோஜனா கணக்குகள் பெரிதும் பயனளிக்கும் என்று பல தரப்பாலும் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் இந்த ஜன் தன் யோஜனா திட்டம் மோசடிகளின் மொத்த கூடாரமாக இருக்கிறது. சுமார் ஒரு மாதம் முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் டெல்லி பதிப்பு இதுகுறித்து விரிவான முதல்பக்க கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

ஜன் தன் யோஜ‌னா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 24.10 கோடி வங்கிக் கணக்குகளும் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகள். இவற்றை பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தவே இல்லை.இதனால் அவை செயல்படாத கணக்குகளாக மாறத் தொடங்கின. பிரதமர் தொடங்கிவைத்த திட்டத்தை எப்படி முடங்கவிட முடியும்? குறைந்தப்பட்சம் அல்லது வழக்கம்போல, அவை செயல்படும் நிலையில் இருப்பதைப் போல ஜோடிக்கவாவது செய்ய வேண்டும் இல்லையா? அதைத்தான் செய்தார்கள்.

மக்கள் பயன்படுத்தாமல் முடங்கிக்கிடந்த ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளில், அவர்களுக்கே தெரியாமல் 1 ரூபாய், 2 ரூபாய் செலுத்தப்பட்டது. அதிகப்பட்சமாக 10 ரூபாய் வரை செலுத்தப்பட்டது. மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த பிரேம்பாய் என்பவரின் வங்கிக் கணக்கில் வெறும் 10 பைசா செலுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் செயலற்ற நிலையில் இருந்து ‘செயல்படும்’ கணக்குகளாக அவை மாற்றி அமைக்கப்பட்டன.

2015 ஆகஸ்ட் மாதத்தில் 8.40 கோடியாக இருந்த, செயல்படாத ஜன் தன் யோஜனா கணக்குகளின் எண்ணிக்கை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5.87 கோடியாக குறைந்தது. அதாவது ஒரே ஆண்டில் 2.5 கோடி கணக்குகள் செயல்படும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. 

இந்தப் பணத்தை தங்கள் சொந்தப் பணத்தில் இருந்தே செலுத்தியதாக கூறினர் வங்கி ஊழியர்கள். மேலிட அழுத்தம் காரணமாக இப்படி செய்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் மாதிரி ஆய்வில், மொத்தம் 18 பொதுத் துறை வங்கிகளில் உள்ள 1.8 கோடி ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளில் 1 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

மிகப் பிரமாண்டமான விளம்பரங்களுடன் 2014 ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியும், இந்தியாவின் மற்ற 76 நகரங்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் ஒரே நாளில் தொடங்கி வைத்தார்கள். அரசின் வேறு எந்த திட்டத்துக்கும் இவ்வளவு பெரிய launch pad இல்லை.

பிரதமரின் செல்லாத நோட்டு அறிவிப்பால் ஜன் தன் வங்கி கணக்குகள் உயிர் பெற்றது. அந்த வங்கி கணக்குகளில் கருப்பு பணத்தை முதலீடு அதிகரித்துள்ளது. இதை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகள் எடுத்தது. ஒரு பைசா கூட கணக்கில் வரவு வைக்கப்படாத ஜந்தன் கணக்குகளில் ஒரே இரவில் லட்சக்கணக்கில் போடப்பட்டது. 

34000 கோடி வரை ஜன் தன் வங்கி கணக்கில் போடப்பட்டது. இவ்வாறு போடப்பட்ட பணம் முழுதும் உபியிலும் , பீகாரிலும் அதிகம் என்று கூறப்பட்டது. இவை எல்லாம் கருப்பு பண முதலாளிகள் தங்கள் பணத்தை அப்பாவி ஏழை மக்கள் வங்கி கணக்கில் போட்டதாக தகவல் வெளியானது.  

பிரதமரின் ஜன் தன் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஜன் தன் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் ரூ.10,000 மட்டுமே பணம் எடுக்க முடியும். ரூ.10,000 மேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கி மேளாளரின் அனுமதி தேவை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. KYC விவரங்களை தராதவர்கள் மாதம் ரூ.5000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளது                        

click me!