செல்லாத நோட்டு அறிவிப்பால் படுத்து கொண்ட ஆன்லைன் வர்த்தகம்

First Published Dec 22, 2016, 5:07 PM IST
Highlights


நாட்டை டிஜிட்டல்  பரிமாற்றத்துக்கும், பணம் இல்லா பொருளாதாரத்துக்கு மாற்றுவதற்காக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், நவம்பர் 8-ந் தேதிக்கு பின், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் மக்கள் செலவு செய்யும் மதிப்பின் அளவு கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதே சமயம், ஆன்-லைன் மூலம் பரிமாற்றம் செய்பவர்கள், மொபைல் பேங்கிங் பரிமாற்ற எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், மதிப்பின் அடிப்படையில் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த 43 நாட்களாக மக்கள் தங்களின் செலவை பெருவாரியாகக் குறைத்துவிட்டதே இந்த அளவு வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரூபாய் நோட்டு அறிவிப்பு

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி ரூ. 500, ரூ.1000 நோட்டுளை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் ஏ.டி.எம்., வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

டிஜிட்டல் பரிமாற்றம்

அதேசமயம், டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள், மொபைப் பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டுகள் பரிமாற்றத்துக்கு ஊக்கம் அளிக்க அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடும் வீழ்ச்சி

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வு அறிக்கையில் கூறுப்படுகையில், “ 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாட்டில் கிரெடிட்,டெபிட் கார்டுகள் மூலம் பரிமாற்றம் மதிப்பு ரூ. 35 ஆயிரத்து 240 கோடியாகக் குறைந்துள்ளது. இது கடந்த பிப்ரவரிமாதத்துக்கு இணையான வீழ்ச்சியாகும். அப்போது, ரூ. 33  ஆயிரத்து 600 கோடியாக இருந்தது.

டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யும் பரிமாற்றங்கள் கடந்த ஜனவரியில் ரூ. 33 ஆயிரத்து 230 கோடியில் தொடங்கி அதிகபட்சமாக அக்டோபர் மாதம் ரூ. 51 ஆயிரம் 116 கோடியாக  உயர்ந்தது.

வாங்கும்சக்தி குறைந்தது

ஆனால், மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி, செலவு செய்யும் தன்மை குறைந்து, பரிமாற்றம் அளவு ரூ. 35,240 கோடியாகக் குறைந்துள்ளது. இது டிசம்பர் மாதம் ரூ.18 ஆயிரத்து 130 கோடியாக கடுமையாக வீழ்ச்சி அடையும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பொருளாதாரம் வீழ்ச்சியடையும்

ஸ்டேட் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சுவுமியா கந்தி கோஷ் கூறுகையில், “ மக்கள் மத்தியில் நுகர்வுச் செலவு பெருமளவு குறைந்ததே கார்டுகள் பரிமாற்றத்தின் மதிப்பு குறைவுக்கு காரணமாகும். டிசம்பர் மாதம் அளவு இதைக் காட்டிலும் மோசமாக இருக்கும்.  இந்த தாக்கம் நாட்டின்  பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கார்டுகள் மூலம் மக்கள் செலவு செய்வது கனிசமாகக் குறைந்துள்ளது. ஏனென்றால் மக்கள் கையில் பணம் இல்லை.அதேசமயம், வழக்கத்தைக் காட்டிலும், மொபைல் பேங்கிங் பரிமாற்றம் அளவு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் அதிகரித்து, ரூ.1.24,500 கோடியாக  இருக்கிறது.

டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் சராசரியாக மாதத்துக்கு செலவு செய்யும் தொகை அக்டோபரில் ரூ.2,229 ஆக இருந்த நிலையில், நவம்பரில் இது ரூ.1,719 ஆக சரிந்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

click me!