விவிபேட் வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (VVPAT - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், விவிபேட் வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வாக்குப்பதிவு இயந்திரங்களின் ‘Source Code’ குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அத்துடன், ““மைக்ரோ கன்ட்ரோல் யூனிட் கன்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது விவிபேடில் பொருத்தப்பட்டுள்ளதா? பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ கன்ட்ரோல் யூனிட் ஒரு முறை புரோகிராம் செய்யப்பட்டதா? தேர்தல் சின்னங்களை பதிவேற்றும் யூனிட்டுகள் எத்தனை உள்ளன? கன்ட்ரோல் யூனிட் மட்டும் சீலிடப்படுகிறதா? அல்லது விவிபேடு தனியாக வைத்து பாதுகாக்கப்படுகிறதா?” ஆகிய 4 கேள்விகளை தேர்தல் ஆணைத்திற்கு எழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
Fact Check பிரதமர் மோடிக்கு மட்டும் ஆதரவளிக்கும் கர்நாடக வாக்காளர்கள்?
அதன்படி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். “EVM , VVPAT எந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் எந்திரம், EVM, VVPAT ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும். தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்மந்தப்பட்ட எந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும். Control Unit, Ballot Unit மற்றும் VVPAT ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கண்ட்ரோலரைக் கொண்டுள்ளன. இவற்றை Physical ஆக அணுக முடியாது. அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை. அவற்றை மாற்ற முடியாது.” என தேர்தல் ஆணைய அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.
இதனை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் 100 சதவீதம் எண்ண கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. தேர்தல் ஆணையத்திடம் சில விளக்கங்களை கேட்க இன்று இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், பதில்கள் பெறப்பட்டதாக தெரிவித்து தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.