டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்து வரும் இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
வேளாண் பொருட்களின் விலையை மத்திய அரசு இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மேகதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 30-ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு இந்த போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
Narendra Modi: மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு; வைகோ கடும் கண்டனம்
இந்த நிலையில் இன்று காலை திடீரென சில விவசாயிகள் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில பெண்கள் மரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சி போராட்டம் நடத்த முயன்றனர். உடனடியாக டவர், மரத்தின் மீது ஏறிய தமிழக விவசாயிகளை கிரேன் உதவியுடன் துணை ராணுவ படை வீரர்கள் வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.
இதுகுறித்து பேசிய விவசாயி ஒருவர் “விவசாய விளை பொருட்கள் விலையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும், விவசாயிகளுக்கு ரூ.5000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும் தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், நடந்து வரும் மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிர்த்து 1000 பேர் போட்டியிட உள்ளோம். அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மோடியின் நண்பர்களிடம் இருந்து பணத்தை மீட்டு 90 சதவீத மக்களுக்குப் பகிர்ந்தளிப்பேன்: ராகுல் காந்தி!
பல்வேறு வகையில் தமிழக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால் டெல்லி ஜந்தர் மந்தரில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.