மோடியின் நண்பர்களிடம் இருந்து பணத்தை மீட்டு 90 சதவீத மக்களுக்குப் பகிர்ந்தளிப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் குறித்து பேசி பிரதமர் மோடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். நமது வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளது என காங்கிரஸ் கூறி வருகிறது. அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும் என்றார்.
பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி வருகின்றன. தனது பாட்டி இந்திரா காந்தியும் தனது தாய் சோனியா காந்தியும் இந்த நாட்டிற்காக தாலியை தியாகம் செய்திருப்பதாக பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், மோடியின் நண்பர்களிடம் இருந்து பணத்தை மீட்டு 90 சதவீத மக்களுக்குப் பகிர்ந்தளிப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய சமூக நீதி மாநாடான சமாஜிக் நியாய மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை, அரசியலில் எனக்கு தீவிரம் இல்லை என்று ஊடகங்களில் என்னைப் பற்றி சொல்கிறார்கள். அவர்களை ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், நிலம் கையகப்படுத்தும் மசோதா மீது போராடுவது தீவிர அரசியல் கிடையாது; அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் விராட் கோலியை பற்றி பேசுவதுதான் தீவிர அரசியல் போல.” என சாடினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல என தெரிவித்த ராகுல் காந்தி, “அது என் வாழ்க்கையின் நோக்கம், அதை விடமாட்டேன். சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. காங்கிரஸ் அரசு வந்தவுடன் முதலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம். இது எனது உத்தரவாதம்.” என்றார்.
“தலித்துகள், ஓபிசி சமூகம், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் உட்பட இந்தியாவின் 90% பேருக்கு பயங்கர அநீதி இழைக்கப்படுகிறது. அவர்களுக்கு நீதி வழங்குவதே தேசபக்தி. ஆனால் நரேந்திர மோடி இதை கண்டு அஞ்சுகிறார்.” என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது தனக்கு அரசியல் பிரச்சினை அல்ல எனவும், தனது வாழ்க்கையின் நோக்கம் எனவும் ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸ் அறிக்கை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், பிரதமர் பீதியடைந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அப்படியானால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒரு புரட்சிகரமானது எனவும் தெரிவித்தார்.
தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார். மோடியின் நண்பர்களிடம் இருந்து பணத்தை மீட்டு 90 சதவீதம் மக்களுக்குப் பகிர்ந்தளிப்பேன். பெரும் பணக்காரர்களின் பணம் பொது மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் ராகுல் காந்தி அப்போது உறுதியளித்தார்.