மரணத்திற்குப் பிறகும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி சத்தீஸ்கரின் சர்குஜாவில் உள்ள விஜய் சங்கல்ப் சங்கநாத் மகாராலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக்கின் சிந்தனையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். காங்கிரஸை தங்கள் மூதாதையர் சொத்தாக கருதுபவர்கள், இந்தியர்கள் தங்கள் சொத்துக்களை தங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதை விரும்ப மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
அப்போது பேசிய பிரதமர் “ காங்கிரஸ் கட்சியின் ஆபத்தான எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று அரச குடும்பத்து இளவரசரின் ஆலோசகர் சில காலத்திற்கு முன்பு கூறினார். இப்போது இவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றுவிட்டனர்.
விவிபேட் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி: அதிகாரிகள் ஆஜராக உத்தரவு!
இப்போது காங்கிரஸ் பரம்பரை வரி விதிப்பதாகவும், பெற்றோரிடமிருந்து வரும் வாரிசுச் சொத்துக்கும் வரி விதிக்கப் போவதாகவும் கூறுகிறது. ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கடின உழைப்பால் நீங்கள் சேர்த்த சொத்துகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியாது.. காங்கிரஸ் அதையும் உங்களிடமிருந்து பறித்துவிடும். நீங்கள் உயிருடன் இருக்கும் வரை காங்கிரஸ் அதிக வரிகளை விதிக்கும், நீங்கள் இறந்த பிறகும் காங்கிரஸ் உங்களுக்கு பரம்பரை வரியை சுமத்திவிடும். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் தங்களின் தேசமாகக் கருதியவர்கள். காங்கிரஸ் கட்சியை தங்கள் குழந்தைகளுக்கு மூதாதையர் சொத்தாகக் கொடுத்தவர்கள், ஒரு சாமானிய இந்தியர் தனது சொத்தை தன் குழந்தைகளுக்குக் கொடுப்பதை விரும்பவில்லை. கொள்ளையடிப்பது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் தாரக மந்திரம்.” என்று கடுமையாக சாடினார்.
முன்னதாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியாவிலும் அமெரிக்கா போன்ற பரம்பரை வரி சட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். .இதுகுறித்து பேசிய அவர் " அமெரிக்காவில், பரம்பரை வரி உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும் போது அவர் தனது குழந்தைகளுக்கு 45% மட்டுமே மாற்ற முடியும், 55% அரசாங்கத்தால் பறிக்கப்படுகிறது. அது ஒரு சுவாரஸ்யமான சட்டம், உங்கள் தலைமுறையில் நீங்கள் செல்வத்தை உருவாக்குகிறீர்கள், நீங்கள் உங்கள் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும். எல்லா செல்வத்தையும் இல்லை. அதில் பாதி, இது எனக்கு நியாயமான சட்டமாக தெரிகிறது.
இந்தியாவிலும் 50% பரம்பரை வரி.. காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக பதிலடி..
இந்தியாவில், உங்களிடம் அந்த சட்டம் இல்லை. ஒருவன் 10 பில்லியன் சொத்து மதிப்புடையவன், அவன் இறந்தால், அவனுடைய பிள்ளைகளுக்கு 10 பில்லியன் கிடைக்கும், பொதுமக்களுக்கு ஒன்றும் கிடைக்காது... எனவே, இந்த மாதிரியான பிரச்சினைகளைத்தான் மக்கள் விவாதிக்க வேண்டும். நாளின் முடிவில் என்ன முடிவு வரும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் செல்வத்தை மறுபங்கீடு செய்வது பற்றி பேசும்போது, புதிய கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்களைப் பற்றி பேசுகிறோம், அது மக்களின் நலனுக்காக மட்டுமே.. பெரும் பணக்காரர்களின் நலனுக்காக அல்ல” என்று தெரிவித்தார்.
எனினும் இந்தியாவை அழிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக பா.ஜ.க விமர்சித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர் அவரின் கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எனினும் சாம் பிட்ரோடாவின் பரம்பரை வரி தொடர்பான கருத்துக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. அக்கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர், ஜெய்ராம் ரமேஷ், " சாம் பிட்ரோடா அவர் தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார். ஒரு ஜனநாயகத்தில், ஒரு நபர் தனது தனிப்பட்ட கருத்துக்களைப் பற்றி விவாதிக்கவும், வெளிப்படுத்தவும், விவாதிக்கவும் சுதந்திரமாக இருக்கிறார். ஆனால் அவரின் கருத்துக்கள் எப்போதும் இந்திய தேசிய காங்கிரஸின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்று அர்த்தம் இல்லை” என்று தெரிவித்திருந்தார். எது எப்படியோ காங்கிரஸ் தலைவரின் பரம்பரை வரி தொடர்பான பேச்சு விவாதப் பொருளாக மாறி உள்ளது. .