விவிபேட் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று பிற்பகலில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (VVPAT - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இன்று இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவுள்ளது.
அந்த வகையில் இன்றைய விசாரணையின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களின் ‘Source Code’ குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ‘Source Code’ விவரங்களை வெளியிடுவது தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாட்டில் சில சந்தேகங்கள் தங்களுக்கு உள்ளதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகள் முன் வைத்து விடைகாண விரும்புவதாக தெரிவித்தது.
தாலியின் மதிப்பு சிலருக்கு புரியவில்லை: பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி
அதன்படி, “மைக்ரோ கன்ட்ரோல் யூனிட் கன்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது விவிபேடில் பொருத்தப்பட்டுள்ளதா? பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ கன்ட்ரோல் யூனிட் ஒரு முறை புரோகிராம் செய்யப்பட்டதா? தேர்தல் சின்னங்களை பதிவேற்றும் யூனிட்டுகள் எத்தனை உள்ளன? கன்ட்ரோல் யூனிட் மட்டும் சீலிடப்படுகிறதா? அல்லது விவிபேடு தனியாக வைத்து பாதுகாக்கப்படுகிறதா?” ஆகிய 4 கேள்விகளை தேர்தல் ஆணைத்திற்கு எழுப்பியது.
இதையடுத்து, விவிபேட் வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.