தாலியின் மதிப்பு சிலருக்கு புரியவில்லை: பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி

By Manikanda PrabuFirst Published Apr 24, 2024, 12:57 PM IST
Highlights

தாலியின் மதிப்பு சிலருக்கு புரியவில்லை என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்

முஸ்லிம்கள் குறித்து பேசி பிரதமர் மோடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். நமது வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளது என காங்கிரஸ் கூறி வருகிறது. அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும் என்றார்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? என கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, “பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.” என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், தாலியின் மதிப்பு சிலருக்கு புரியவில்லை என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரியங்கா காந்தி, “உங்களது தாலியையும் தங்கத்தையும் உங்களிடமிருந்து பறிக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாக கடந்த 2 நாட்களாக சிலர் கூறி வருகின்றனர். பெண்களின் வலியையும், போராட்டத்தையும் புரிந்து கொள்ளாமல், இதுபோன்ற முட்டாள்தனமான கூற்றை சிலர் வெளியிடுகின்றனர். எனது பாட்டி தனது தங்க நகைகளை போருக்காக தியாகம் செய்தார். எனது தாய் தனது தாலியை இந்த நாட்டிற்காக தியாகம் செய்தார். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் யாருடைய தாலியையும் பறிக்கவில்லை. விவசாயிகளின் மனைவிகளின் தாலியை அறுத்தவர்தான் மோடி.” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சைக்குள்ளான UPCOP ஆஃப்!

முன்னதாக, மக்கள் சொத்துக்களை காங்கிரஸ் கைப்பற்றும் என மோடி விமர்சிக்கிறார். ஆனால், உண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்களது சொத்துக்களை வழங்கியவர்கள் என இந்திய சீன போரின் போது, 1962ஆம் ஆண்டில் இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படத்தை பகிர்ந்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், தனது பாட்டி இந்திரா காந்தியும் தனது தாய் சோனியா காந்தியும் இந்த நாட்டிற்காக தாலியை இழந்திருக்கிறார்கள். டெல்லி எல்லையில் போராடிய 700 விவசாயிகளின் மனைவிகளின் தாலியை அறுத்தவர் தான் மோடி என பிரியங்கா காந்தி எதிர்வினை ஆற்றியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்து பெண்களின் தாலியை அறுத்து விடுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி பேசி இருந்த நிலையில், பிரியங்கா காந்தியின் எதிர்வினைக்க்கு பிரதமர் என்ன பதிலளிப்பார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

click me!