Fact Check பிரதமர் மோடிக்கு மட்டும் ஆதரவளிக்கும் கர்நாடக வாக்காளர்கள்?

By Manikanda PrabuFirst Published Apr 24, 2024, 3:25 PM IST
Highlights

கர்நாடக மாநில வாக்காளர்கள் பிரதமர் மோடிக்கு மட்டுமே ஆதரவளிப்பது போன்ற வீடியோ பரப்பப்படும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவந்துள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளாவின் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடக மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலை முன்னிட்டு முன்னணி ஊடக நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களில் முகாமிட்டு கள நிலவரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அந்தவகையில், இந்தியா டுடே செய்தி தொலைக்காட்சியினாசிரியர் ராஜ்தீப் சர்தேசாய், கர்நாடக மாநில கள நிலவரம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து தொகுத்து வெளியிட்டார்.

கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் அவர்களது வாக்கு யாருக்கு என்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், மோடி மற்றும் சித்தராமையா இருவர் அளிக்கும் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பியதுடன், அவர்களின் ஆதரவு யாருக்கு ஆதரவு என கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், ராஜ்தீப் சர்தேசாயின் பேட்டியை பகிரும் பலரும் கர்நாடகா வாக்காளர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கே ஆதரவளிப்பதாக தெரிவித்து வருகின்றனர். அவர்கள் பகிரும் வீடியோவிலும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மாநில நலன்களை விட,  பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியை விரும்புவதாகவே பலரது கருத்துகளும் இடம் பெற்றுள்ளன.

 

Modi Ki Guarantee 😀😀 pic.twitter.com/AfLWOxzski

— Shehzad Jai Hind (Modi Ka Parivar) (@Shehzad_Ind)

 

ஆனால், அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. அதாவது, கர்நாடக மாநில வாக்காளர்கள் பிரதமர் மோடிக்கு மட்டுமே ஆதரவளிப்பது போன்ற வீடியோ பரப்பப்படும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி, அந்த வீடியோவில் சித்தராமையாவிற்கு ஆதரவான கருத்துகள் மட்டும் நீக்கப்பட்டு, மோடிக்கே கர்நாடக வாக்காளர்கள் ஆதரவு என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் தொனியில் எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

 

Modi Vs Siddaramaiah in . Rajdeep Sardesai brings you the ground report. pic.twitter.com/DZO7K4YFbh

— IndiaToday (@IndiaToday)

 

கடந்த  ஏப்ரல் 16ம் தேதி இந்தியா டுடேயின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பான வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மோடி Vs சித்தராமையா என்ற தலைப்பில் பதிவிடப்பட்டிருந்த அந்த வீடியோவில், முதலில் பேசும் பல பெண்கள் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறுகின்றனர். அதன்பிறகு வீடியோவில் 2.00ஆவது நிமிடத்தில் பேசும் பெண் ஒருவர், பிரதமர் மோடியை ஆதரித்து கருத்து தெரிவிக்கிறார். தொடர்ந்து சிலரும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். கடைசியாக, பாஜக கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஒருவர் ஆதரவு தெரிவிக்கிறார்.

 

The BJP IT cell has edited a video from a show which we did on a bus in Karnataka! Yes, PM Modi is hugely popular in Karnataka but fairness surely demands that you don’t edit a clip from for your poltical agenda. Why not also show the voices who endorsed CM… https://t.co/ukd55ZOzYP

— Rajdeep Sardesai (@sardesairajdeep)

 

அதேபோல், அந்த வீடியோ குறித்து பேட்டியெடுத்த ராஜ்தீப் சர்தேசாயும் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடகாவில் ஒரு பேருந்தில் நாங்கள் நடத்திய நிகழ்ச்சியின் வீடியோவை பாஜக ஐடி விங் எடிட் செய்துள்ளது. பிரதமர் மோடி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானவர். ஆனால் உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக #ElectionsOnMyPlate நிகழ்ச்சியின் வீடியோவை எடிட் செய்ய வேண்டாம். முதல்வர் சித்தராமையாவை ஆதரித்த குரல்களையும் ஏன் காட்டக்கூடாது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடியின் நண்பர்களிடம் இருந்து பணத்தை மீட்டு 90 சதவீத மக்களுக்குப் பகிர்ந்தளிப்பேன்: ராகுல் காந்தி!

இதன் மூலம், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு ஆகிய இருவருக்குமே ஆதரவு தெரிவித்து கலவையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதும், ஆனால், கர்நாடக மாநில வாக்காளர்கள் பிரதமர் மோடிக்கு மட்டுமே ஆதரவளிப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த வீடியோ எடிட் செய்து பரப்பப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

click me!