
சரக்கு ரயிலின் சக்கரங்களுக்கு இடையில் அமர்ந்து 100 கிலோமீட்டர் தூரம் பயணித்த சிறுவன் ஒருவன் அதிசயமாக உயிர் பிழைத்து, உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் (RPF) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான்.
குழந்தைகள் உலகமே தனிதான், பெரும்பாலும் விளையாட்டை குழைந்தைகள் விரும்புகின்றனர். விளையாடிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு சோறு, தண்ணி எதுவும் தேவையில்லை. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ ஆலம்நகர் ராஜாஜிபுரத்தில் உள்ள பாலாஜி மந்திர் அருகே ரயிலே தண்டவாளம் அருகே வசிக்கும் சிறுவன் ஒருவன், தனது நண்பர்களுடன் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
அப்போது, யார் கண்ணிலும் சிக்காமல் இருக்கும் பொருட்டு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது ஏறி ஒளிந்துள்ளான். ஆனால், அந்த ரயில் தீடிரென நகரத் தொடங்கியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுவன் இறங்க முடியாமல் செய்வதறியாது திகைத்துள்ளான். தொடர்ந்து, சரக்கு ரயிலின் டயர்களுக்கு இடையில் அமர்ந்து அழுது கொண்டே அவன் பயணித்துள்ளான்.
விவிபேட் வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு: தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம்!
இதனிடையே, அந்த சரக்கு ரயில் ஹர்டோய் ரயில் நிலையத்தை அடைந்ததும், வழக்கமான சோதனையின் போது சிறுவனை ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்த தகவல்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, ஹர்டோய் ரயில் நிலையத்தில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். ரயில்வே பாதுகாப்புப் படையினர் அச்சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், சிறுவன் மிகுந்த பயத்துடன் காணப்படுகிறான். மேலும், சிறுவனது உடல் முழுவதும் புகை படிந்துள்ளதும் அந்த வீடியோவில் தெரிகிறது. அஜய் என அடையாளம் காணப்பட்டுள்ள சிறுவன், குளிக்க வைக்கப்பட்டு உணவு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குழந்தைகள் நலக் குழுவின் பராமரிப்பில் வைக்கப்பட்ட சிறுவன் அஜய், குழந்தைகள் உதவி மைய பணியாளர்களின் உதவியுடன் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளான். விரைவில், குடும்பத்துடன் சிறுவன் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.