கருப்பு பணம் ஒழிப்பு சாத்தியமானதா? - 5.75 கோடி புதிய ரூபாய் நோட்டுகளுடன் பிடிபட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்

First Published Dec 2, 2016, 6:07 PM IST
Highlights


பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், பல நகரங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், இதுவரை ரூ.152 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், புதிய ரூ.500, ரூ2000 நோட்டுகளின் மதிப்பு மட்டும் ரூ.5.7 கோடி என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிரடி ரெய்டு

 சில பண முதலைகள் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை மாற்றமாற்றி வருகிறார்கள் என அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,வருமானவரித்துறை, அமலாக்கப்பரிவு, போலீசார் இணைந்து முக்கிய நகரங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். 



 புதிய கரன்சிகள்

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், “ பெங்களூரு, ஈரோடு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிர சோதனை மேற்கொண்டோம். இதில் ஓட்டுமொத்தமாக ரூ. 152 கோடி கணக்கில் வராத கருப்புபணம்  பிடிபட்டுள்ளது.

இதில் பெங்களூருவில் அரசு ஒப்பந்தப் பணிகளை செய்துவரும் இரு பொறியாளர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது. ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்ட புதிய கரன்சிகள் மதிப்பு ரூ.5.7 கோடியாக உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள். மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், புதிய கரன்சிகள் அதிக அளவில் கைப்பற்றப்படுவது இதுதான் முதல்முறையாகும்.

7 கிலோ தங்கபிஸ்கட்

்அது மட்டுமல்லாமல், இந்த சோதனையில் 7 கிலோ தங்க பிஸ்கட்கள், ரூ.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், பழைய ரூ.1000, ரூ500 நோட்டுகள் மட்டும் ரூ.90 லட்சம் இருந்தது. ஏராளமான சொத்துப்பத்திரங்கள், ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளோம்'' எனத் தெரிவித்தனர்.

விசாரணை

இதற்கிடையே மத்திய நேர்முகவரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ கருப்பு பணம் பதுக்கல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு, தங்கம், நகைகள் ஆகியவை பழைய ரூபாய்களை மாற்றியதன் மூலம் வாங்கப்பட்டவை. இதில் ஒரு பொறியாளரும், ஒப்பந்ததாரரும் ஈடுபட்டுள்ளனர். மேலும், ரூ.100, ரூ500 நோட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். அவற்றின் மதிப்பை ஆய்வு செய்து வருகின்றனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியப்பு

சமானிய மக்கள் ரூ. 2 ஆயிரம் பெறுவதற்காக வங்கிகள், ஏ.டி.எம். முன் கால்கடுக்க காத்துக்கிடக்கும் போது, இதுபோன்ற கருப்பு பண முதலைகளிடம் புதிய ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது, வருமான வரித்துறை அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டாக்டர்

கடந்த 2 நாட்களுக்கு முன், கொல்கத்தாவைச் சேர்ந்த டாக்டரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். 

பா.ஜனதா பிரமுகர்

ஈரோட்டில், பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவரிடம் ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். வருமான வரித்துறையினர் நேற்று முன் தினம் நடத்திய ரெய்டில் மட்டும் ரூ.ஒரு கோடிக்கு புதிய கரன்சிகள்கைப்பற்றப்பட்டுள்ளன.

மக்கள் கேள்வி

புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பெற முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுபோன்ற புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் கத்தை கத்தையாக ரூ.5.7 கோடி சிக்கியிருப்பது மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு உண்மையில் நடக்கிறதா? என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நவம்பர் 8-ந் தேதிக்கு பின், நாங்கள் நடத்திய சோதனையில் புதிய கரன்சிரூ.5.7 கோடி கைப்பற்றப்பட்டது இதுவே மிக அதிகமாகும். இது தொடர்பாக பல வங்கி ஊழியர்களையும், அதிகாரிகளையும் விசாரித்து வருகிறோம். இதுபோன்ற புதிய ரூபாய் நோட்டுகள் வங்கி மேலாளர்கள், அதிகாரிகள் துணையின்றி இவ்வளவு அதிகமாக ஒரு நபரிடம் சென்று சேர வாய்ப்பில்லை'' என்றார்.

இதற்கிடையே, இந்த சோதனையின் போது, தனிநபர்களின் ஏராளமான அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியே ஏராளமான கருப்புபணம் வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது.

click me!