கூகுள் தேடலில் 20 ஆண்டுகால சாதனையை முறியடித்த பரம்பரை வரி!

By Manikanda PrabuFirst Published Apr 25, 2024, 4:19 PM IST
Highlights

இந்தியாவில் பரம்பரை  வரி மீதான கூகுள் தேடல் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. ராஜஸ்தான் மாநில பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். நமது வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளது என காங்கிரஸ் கூறி வருகிறது. அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும் என்றார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு தலைரான சாம் பிட்ரோடா செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் பாரம்பரை சொத்து வரி சட்டம் அமலில் உள்ளது. உதாரணமாக ஒருவரிடம் 10 கோடி டாலர் மதிப்பிலான சொத்துஇருந்தால், அவர் உயிரிழக்கும்போது 55% சொத்தை அரசு எடுத்துக் கொள்ளும். மீதமுள்ள 45% சொத்துகளை மட்டுமே அவருடைய வாரிசுகள் பிரித்து எடுத்துக் கொள்ள முடியும். இதுஒரு நல்ல சட்டம். இது எனக்கு நியாயமாக தெரிகிறது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் விவாதிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்கு பாஜக கடும் எதிர்வினை ஆற்றி வருகிறது. பிரதமர் மோடி முதல் பாஜக தலைவர்கள் அனைவரும் இந்தக் கருத்தை தேர்தல் பிரசார ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். “காங்கிரஸ் கட்சியின் அபாயகரமான உள்நோக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த சொத்து உங்கள் பிள்ளைகளுக்கு முழுமையாக கிடைக்காது. மாறாக அதை காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து பறித்து வேறு ஒருவருக்கு வழங்கிவிடும்.” என பிரதமர் மோடி சாடினார்.

சாம் பிட்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்திவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுன் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். ‘பரம்பரை சொத்து வரி குறித்த தனது கருத்து சர்ச்சையான நிலையில், அமெரிக்காவில் உள்ள பரம்பரரை சொத்து வரிச் சட்டம் குறித்து சாதாரணமாகத் தெரிவித்ததாகவும், இந்தியாவிலும் இது நடக்கும் என்று யார் சொன்னது? பாஜகவும், ஊடகங்களும் ஏன் பதற்றமடைகின்றன? எனவும் சாம் பிட்ரோடா கேள்வி எழுப்பியுள்ளார். சாம் பிட்ரோடாவின் கருத்து தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் கட்சியும் விளக்கம் அளித்துள்ளது.

கர்நாடகாவில் 1,832 சிறப்பு வாக்குச் சாவடிகளை அமைக்கும் தேர்தல் ஆணையம்!

பரம்பரை சொத்து வரி விதிக்கும் எந்தத் திட்டமும் காங்கிரஸிடம் இல்லை என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “பரம்பரை சொத்து வரி குறித்து 2014ஆம் ஆண்டு முதல் பாஜக அரசு பேசி வருகிறது. மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த பாஜக மூத்த தலைவர் ஜெயந்த் சின்ஹா, பரம்பரை சொத்து வரியை அறிமுகப்படுத்த விரும்புவதாக 2014ஆம் ஆண்டில் பகிரங்கமாகப் பேசினார். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மேற்குலக நாடுகளில் விதிக்கப்படும் பரம்பரை சொத்து வரி குறித்து 2018ஆம் ஆண்டில் புகழ்ந்து பேசி உள்ளார்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்று பரம்பரை வரி நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்தியாவில் பரம்பரை  வரி மீதான கூகுள் தேடல் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல், சாம் பிட்ரோடாவின் பேச்சும் 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் கூகுள் தேடலில் உச்சம் பெற்றுள்ளது.

பரம்பரை வரி என்றால் என்ன?

இந்தியாவில், ஒரு நபர் தனிப்பட்ட முறையில் சம்பாதித்த அவரது சொந்த சொத்து அல்லது மூதாதையர் சொத்து, அவர் இறந்த பிறகு அவரது குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்களை சட்டப்பூர்வமாக சென்றடைகிறது.. இந்தச் சொத்து மீது அரசு உரிமை கோராமல் வாரிசகளின் பெயருக்கு சட்டப்பூர்வமாக மாற்றப்படுகிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த சொத்துக்கு பரம்பரை வரி விதிக்கப்படுகிறது. அதன்படி, ஒருவர் இறந்த பிறகு, அவரது குழந்தைகள் அல்லது வாரிசுகளுக்கு மொத்த சொத்தில் 45 சதவீதம் மட்டுமே சென்றடையும். மீதமுள்ள 55 சதவீதம் அரசுக்கு சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!