பார்த்ததோ பியூன் வேலை...! சொத்து மதிப்போ ரூ.10 கோடிக்குமேல்; 18 பிளாட்; 2 கி. தங்கம்...! என்ன தலை சுத்துதா?

First Published May 2, 2018, 7:00 PM IST
Highlights
Crorepati attender in Transport Department


போக்குவரத்து துறையில் பியூனாக பணியாற்றும் ஒருவர் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளும், 18 பிளாட்களும், 50 ஏக்கர் நிலமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. 

ஆந்திர மாநிலம், நெல்லூரியில் போக்குவரத்து துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக நரசிம்ம ரெட்டி (55) என்பவர் பணியாற்றி வருகிறார். நரசிம்ம ரெட்டி, அண்மைடியல் 18 பிளாட்களை ஒரே நேரத்தில் விலைக்கு வாங்கியுள்ளார். ஒரே நேரத்தில் 18 பிளாட்கள் வாங்கியது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நரசிம்ம ரெட்டியின் வீட்டில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது 7 கிலோவுக்கும் அதிகமான வெள்ளிப் பொருட்களும், ஏராளமான தங்க நகைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகைகள் அனைத்தும அண்மையில் வாங்கப்பட்டுள்ளது என்பதும், விஜயவாடாவில் உள்ள நகைக்கடையில் வாங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், 18 பிளாட்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. பிளாட்கள் அனைத்தும், நரசிம்ம ரெட்டியின் பெயரிலும், மனைவி மற்றும் உறவினர்கள் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த சோதனையின்போது 7.70 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. வங்கியில் 20 லட்சம் ரூபாய், 2 கிலோ தங்க நகைகள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான எல்.ஐ.சி. காப்பீடு பத்திரங்கள், 50 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதற்கான ஆவணங்களும் அப்போது கைப்பற்ப்பட்டன. இதனை அடுதது நரசிம்ம ரெட்டி கைது செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், நரசிம்ம ரெட்டி 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி ரூ.650 மாத ஊதியத்துக்கு பணியில் சேர்ந்த அவர் 34 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியில் இருந்தபோது, பணம் பெற்றுக் கொண்டு ஊழலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது அனுமதியில்லாமல் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்துக்கு எந்தவிதமான கோப்புகளும் நகராது. பியூன் வேலையில் ஏராளமான லஞ்சம் கிடைப்பதால், நரசிம்மரெட்டி தனக்கு கிடைத்த பணி உயர்வு வாய்ப்புகள் அனைத்தையும் நிராகரித்துள்ளார் என்றார்.

click me!