நவ.8 க்கு முன்பு பாஜக எம்பி, எம்.எல்.ஏக்களின் வங்கி கணக்கை வெளியிடுங்கள் - மோடிக்கு கபில் சிபில் சவால்

First Published Nov 30, 2016, 10:09 AM IST
Highlights


ரூபாய் நோட்டு விவகாரத்தை உண்மையில் மிகவும் தீவிரமாக பிரமதர் மோடி எடுத்துக்கொள்கிறார் என்றால், முதலில் நவம்பர் 8-ந்தேதி முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.கள், எம்.எல்.ஏ.களின் வங்கிக் கணக்குகளை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

நவ.8-க்கு முன்

நவம்பர் 8-ந்தேதி முன், தனது கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.களின் வங்கிக் கணக்குகளை வெளியிட பிரதமர் மோடி உத்தரவிட்டு இருந்தால், நான் மிகவும் வியந்து இருப்பேன். அப்படிச்செய்தால், அது அந்த கட்சிக்குள் பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடும். அதன் காரணமாகத்தான், நவம்பர் 8-ந் தேதிக்கு பிந்தைய வங்கிக்கணக்கை வௌியிட மோடி தனது கட்சியினரை உத்தரவிட்டுள்ளார்.

சொல்லமுடியுமா?

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நன்கொடை செலுத்த, எந்த காசோலையை பயன்படுத்தினீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்?. நவம்பர் 8-ந் தேதிக்கு முன், எம்.பி.களும், எம்.எல்.ஏ.களும், கட்சியும் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்தீர்கள் என்பதை சொல்லமுடியுமா?.

பீகாரிலும், மேற்கு வங்காளத்திலும் என்ன நடந்தது என்பதைச் சொல்லமுடியுமா?. இவை அனைத்தையும் பிரதமர் மோடி மறைவின்றி கூறினால், உண்மையில், ரூபாய் நோட்டு விவகாரத்தில், மிகவும் தீவிரமாக இருக்கிறார் என நம்புகிறேன்.

அமைதி

நீங்கள் வெளிப்படைத் தன்மை வேண்டும் என விரும்பினால், நவம்பர் 8-ந்தேதிக்கு முன், உங்கள் கட்சி எம்.பிகளும், கட்சியும் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்தார்கள் என்பதை கூற வேண்டும்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அமைதியாக அமர்ந்து இருக்கிறோம். நிலக்கரி ஊழல் அல்லது மற்ற ஊழல்களில் இதுபோல் நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கவில்லையே. இந்த ஊழலில் 80 பேர் பலியாகியும், அமைதியாக அமர்ந்து இருக்கிறோம். பிரதமர் மோடி ஏன் நாடாளுமன்றத்துக்கு வர அவசியமில்லை என்பதற்கு, பாரதிய ஜனதா கட்சி , வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும்.

கோரிக்கை

நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டு விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் பதில் அளிக்காமல் வெட்கப்பட்டு ஓடுகிறார். அவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!