
பலருக்கு, ஒரு கப் தேநீர் இல்லாமல் ஒரு நாள் முழுமையடைவதில்லை. ஆனால், தேநீரை சரியான முறையில், சரியான நேரத்தில், சரியான அளவில் அருந்தினால் மட்டுமே அதன் முழுமையான நன்மைகளை நம்மால் பெற முடியும். தவறான முறையில் தேநீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தேநீர் அருந்த சிறந்த நேரம்:
உணவு உண்ணும் நேரம் போல, தேநீர் அருந்தவும் ஒரு சிறந்த நேரம் உள்ளது. பெரும்பாலானவர்கள் காலை உணவுக்குப் பிறகும், மாலை வேளையிலும் தேநீர் அருந்த விரும்புகின்றனர். ஆனால், சரியான நேரத்தில் தேநீர் அருந்துவதுதான் முக்கியம்.
காலை நேரம்:
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து, சுமார் 1-2 மணி நேரம் கழித்து தேநீர் அருந்துவது நல்லது. குறிப்பாக, காலை உணவுக்கு 2 மணி நேரம் கழித்து, மதிய உணவுக்கு 1-2 மணி நேரத்திற்கு முன்பு தேநீர் அருந்துவது செரிமானத்திற்கு உதவும்.
மதிய நேரம்:
மதிய உணவுக்குப் பிறகு ஒரு கப் தேநீர் அருந்துவது செரிமானத்திற்கு உதவும் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், உணவுடன் சேர்த்து தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதைப் பாதிக்கலாம். உணவு சாப்பிட்ட 1 மணி நேரத்திற்குப் பிறகு தேநீர் அருந்துவது நல்லது.
மாலை நேரம்:
மாலை 4-5 மணிக்கு மேல் தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, படுக்கைக்குச் செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன் காஃபின் நிறைந்த தேநீரைத் தவிர்ப்பது நல்லது. இது தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
தேநீர் அருந்தும்போது செய்ய வேண்டியவை :
காலை உணவுக்குப் பிறகும், மதிய உணவுக்கு முன்பும், மாலை வேளையிலும் தேநீரை சரியான இடைவெளியில் அருந்தலாம்.
ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் தேநீர் அருந்துவதே நல்லது. அதிகமாக அருந்துவது காஃபின் நச்சுத்தன்மை, நீரிழப்பு, நரம்புத் தளர்ச்சி, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதற்குப் பதிலாக, பிஸ்கட், டோஸ்ட் அல்லது சிறிதளவு நட்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து அருந்தலாம். இது அமிலத்தன்மையைக் குறைக்கும்.
இஞ்சி தேநீர், புதினா தேநீர், மஞ்சள் தேநீர், க்ரீன் டீ, ப்ளாக் டீ போன்ற ஆரோக்கியமான தேநீர் வகைகளை முயற்சிக்கலாம். இவை செரிமானத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவும்.
தேநீர் மிகவும் சூடாக இல்லாமல், மிதமான சூட்டில் அருந்துவது நல்லது.
தேநீர் அருந்தும்போது செய்யக்கூடாதவை :
வெறும் வயிற்றில் தேநீர் அருந்த வேண்டாம், இது அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உணவு உண்ட உடனேயே தேநீர் அருந்துவது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதைப் பாதிக்கலாம்.
அதிகப்படியான தேநீர் காஃபின் காரணமாக பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பற்களில் மஞ்சள் கறை படிதல் மற்றும் குழிவு பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
தூங்கும் முன் அருந்த வேண்டாம், காஃபின் கொண்ட தேநீர் தூக்கத்தைக் கெடுக்கும்.
அதிக சர்க்கரை மற்றும் பால் சேர்ப்பது தேநீரின் ஆரோக்கிய நன்மைகளைக் குறைத்து, கலோரி அளவை அதிகரிக்கும். ஐசிஎம்ஆர் (ICMR) கருத்துப்படி, தேநீருடன் பால் சேர்த்து அருந்துவது அதன் நன்மைகளை முழுமையாகப் பெற இயலாது. முடிந்தவரை பால் மற்றும் சர்க்கரையை குறைத்து அல்லது தவிர்த்து தேநீர் அருந்தலாம்.