
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நமது பாரம்பரிய உணவு முறையிலேயே பல சிறந்த தீர்வுகளில் ஒன்றுதான் கொள்ளு ரசம். இந்த ரசம் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், உடல் எடையை குறைப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். ஏன் தெரியுமா?
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1/4 கப்
தக்காளி - 1
வெங்காயம் - 1/4
பூண்டு - 2-3 பற்கள்
புளி கரைசல் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கொள்ளை எடுத்து நன்றாக கழுவி, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும். வெந்த கொள்ளுவை மசித்து, அந்த தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும். இதுவே ரசத்திற்கு தேவையான கொள்ளு சாறு.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.அதனுடன் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு புளி கரைசலை தாளிப்பில் சேர்த்து கிண்டவும். வதக்கிய கலவையுடன் வடிகட்டி வைத்த கொள்ளு சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ரசம் நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
கொள்ளு ரசத்தின் சிறப்புகள்:
- கொள்ளுவில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. புரதம் செரிமானமாக அதிக நேரம் எடுக்கும் என்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால், நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, கலோரி உட்கொள்ளலைக் குறைக்க முடியும்.
- கொள்ளுவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமானத்தை சீராக்குகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும், நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
- மற்ற ரச வகைகளுடன் ஒப்பிடும்போது கொள்ளு ரசத்தில் கலோரிகள் குறைவு. இதனால், உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
- கொள்ளுவில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
- சில ஆய்வுகள் கொள்ளு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதாகக் கூறுகின்றன. இது உடல் எடை குறைப்பிற்கு மேலும் உதவுகிறது.