சிறு தானிய உணவுகளை பெரியவர்கள் சாப்பிட துவங்கினாலும் குழந்தைகள் அதை விரும்புவது கிடையாது. அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் வகையில் இனிப்புகளாக செய்த கொடுப்பதால் சிறு தானிய உணவுகளின் சத்துக்கள் கிடைக்க செய்யலாம்
தொடர்ந்து சிறு தானியங்களை உணவில் சேர்க்க தவிர்த்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், ராகி (கேழ்வரகு) மற்றும் நிலக்கடலை சேர்த்து செய்யும் இந்த லட்டு, பசியை போக்குவதுடன், நீண்ட நேரம் சக்தியை வழங்கும் ஒரு சூப்பர் ஃபுட்டாக இருக்கும். ராகி, இயற்கையாகவே நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் நிறைந்தது. இது எடை கட்டுப்பாட்டுக்கும், நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறந்த உணவு. நிலக்கடலை , நல்ல கொழுப்பு, புரதம், வைட்டமின் பி6, மெக்னீசியம் அதிகம் கொண்டது. இதனால் தசைகள் வளர, சக்தி அதிகரிக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 1 கப்
நிலக்கடலை – 1/2 கப் (வறுத்து தோல் நீக்கியது)
நாட்டு சர்க்கரை – 3/4 கப் (தூளாக்கியது)
நெய் (தூய உருக்கப்பட்டது) – 1/4 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் அல்லது பால் – 2-3 டேபிள்ஸ்பூன் (தேவையான அளவு)
காரசாரமான முட்டை ஆம்லேட் கிரேவி...ஈஸியா இப்படி செய்து பாருங்க
ராகி மற்றும் கடலை லட்டு செய்வது எப்படி?
- ஒரு கடாயில் ராகி மாவை மிதமான தீயில் வறுக்க வேண்டும். மணம் வரும்வரை கிளறி வறுக்க, இது மென்மையாக, கறுத்த நிறமாக மாறும் வரை தொடரவேண்டும். இது லட்டுவிற்கு மொறுமொறு தன்மை மற்றும் நறுமணம் தரும்.
- நிலக்கடலையை வறுத்து, தோலை நீக்கி, மிதமான பொடியாக அரைக்க வேண்டும். முழு நிலக்கடலை சேர்த்தால் லட்டு பக்குவமாக உருவாகாது, அதனால் சிறிதளவு தூளாக்க வேண்டும்.
- ஒரு கடாயில் நாட்டு சர்க்கரையை 2-3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும். இது பிசுபிசு பதத்திற்கு வந்தவுடன், அதில் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும்.
- வறுத்த ராகி மாவு, நிலக்கடலை தூள், பாகு மூன்றையும் சேர்த்து, நெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கலவை சிறிது சூடாக இருக்கும்போதே, கைகளால் உருட்டி லட்டு உருவாக்க வேண்டும்.
- கைகளால் சிறிய உருண்டைகளாக லட்டுகளை உருட்டி, முழுமையாக பதம் வந்து விடும் வரை காய விட வேண்டும். முழுமையான ராகி – நிலக்கடலை லட்டு தயார்.
ராகி - கடலை லட்டின் சிறப்புகள் :
- சர்க்கரை சேர்க்காத இயற்கை இனிப்பு . நாட்டு சர்க்கரையின் இரும்பு மற்றும் மினரல்கள் அதிகமாக இருக்கும்
- நச்சுச்சத்து ஏதும் இல்லாத, குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு
- நீண்ட நேரம் ஆற்றலை தரும் . உடனடி பசியை போக்கும் ஸ்நாக்காக இருக்கும்.
- தயாரிக்க எளிது. மிகக் குறைந்த பொருட்களுடன் இதை ஈஸியாக செய்து விடலாம்.
- நீரிழிவு (Diabetes) உள்ளவர்களுக்கும் சிறந்த உணவு, Low Glycemic Index கொண்டது.
சர்க்கரை இல்லா பேரிச்சை ஓட்ஸ் லட்டு... சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம்
இதை எப்போது சாப்பிடலாம்?
- காலை நேர புத்துணர்வுக்கு டீ அல்லது பாலுடன் சாப்பிடலாம்
- மதிய உணவுக்குப் பிறகு ஒரு இனிப்பு விருப்பத்திற்கு சாப்பிடலாம்.
- மாலை நேர சிற்றுண்டியாக ஆரோக்கியமான Snacks ஆக சாப்பிடலாம்.
- பயணங்களுக்கேற்ற எளிதாக எடுத்துச் செல்லும் உணவு