தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய்யின் கரூர் பயணம் மற்றும் அதிமுக கூட்டணியில் தவெக இணைவது குறித்தும் கருத்து தெரிவித்தார். பின், திருமாவளவனைக் கடுமையாக விமர்சித்த அவர், கோவை மேம்பாலப் பெயர் சர்ச்சை குறித்தும் பேசினார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி அவர்களின் உருவப்படத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
25
விஜய் கரூர் பயணம்
“கரூர் என் சொந்த ஊர். அங்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. நடிகர் விஜய்க்கு கரூர் செல்ல முழு உரிமை உள்ளது. நாட்டில் யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதற்காக டிஜிபியிடம் மனு அளித்துச் செல்ல வேண்டியதில்லை. கரூர் மக்கள் பூதாகரமானவர்கள் அல்ல. விஜய் கரூருக்கு செல்ல போலீசாரின் அனுமதி எதற்கு? இறப்பு வீட்டில் துக்கம் விசாரிக்க வருபவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று கரூர் மக்களுக்குத் தெரியும்.” என்று அண்ணாமலை கூறினார்.
35
அதிமுக கூட்டணிக்கு த.வெ.க. வருமா?
அதிமுக கூட்டங்களில் 'தமிழக வெற்றிக் கழக'த்தைச் (தவெக) சேர்ந்தவர்கள் கலந்து கொள்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, "தேர்தலுக்கும் கூட்டணிக்கும் இன்னும் அவகாசம் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவாரா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்," என்று தெரிவித்தார்.
மேலும், சில கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "திருமாவளவன் உடன் வந்தவர்கள் வழக்கறிஞரைத் தாக்கியது முற்றிலும் தவறு. வழக்கறிஞர் மீதான இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தான் முழு பொறுப்பு. திருமாவளவன் இன்றும் நட்பில் உள்ள ஆதவ் அர்ஜுனாவை தவெக கட்சிக்கு அனுப்பிவிட்டு, பாஜகவை திட்டுகிறார். விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகள் வேறு எங்கோ செல்வதால் தான் திருமாவளவன் பதற்றப்படுகிறார்," என்று குற்றம் சாட்டினார்.
55
கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலம்
"கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்தது சரியான முடிவுதான். ஆனால், அரசு பரிந்துரைத்த பட்டியலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் இருக்கும்போது, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் ஏன் இல்லை? தலைவர்கள் பெயர்கள் விடுபட்டிருப்பதால், சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும். பள்ளிகளில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுடன் முகாம் நடத்துவது கண்டனத்திற்குரியது," என்று அண்ணாமலை கூறினார்.