மதுரையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திறந்து வைத்தார். இந்த மைதானத்தின் சிறப்புகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்.
சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பெரிய நகரமாக விளங்கி வரும் தூங்கா நகரமான மதுரையில் கட்டப்பட்ட மிக பிரம்மாண்ட சர்வதேச கிரிக்கெர் மைதானத்தை இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று திறந்து வைத்தார். மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் மருத்துவமனைக்கு அருகே 11.5 ஏக்கர் நிலத்தில் ரூ.350 கோடி செலவில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது.
24
வேலம்மாள் கல்வி அறக்கட்டளை
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவியுடன் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இந்த கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ளது. தமிழகத்தில் சென்னை சேப்பாக்கம் தான் ஒரே சர்வதேச கிரிக்கெட் மைதானமாக திகழ்கிறது. இந்நிலையில், மதுரையிலும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம்வாய்ந்ததாக அமைந்துள்ளது.
உயர்தர மின் விளக்குகள்
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் நிபுணர்களின் ஆலோசனையுடன் மதுரை கிரிக்கெட் மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது 5,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் போகப் போக இருக்கைகள் விரிவாக்கம் செய்யப்படும். இந்த மைதானத்தில் தரம்வாய்ந்த மூன்று ஆடுகங்கள் உள்ளன. இரவிலும் போட்டிகளை நடத்தும் வகையில் உயர்தர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
34
ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம்
மேலும் நவீன டிரெசிங் ரூம்கள், பயிற்சி அமைப்புகள் மற்றும் ரசிகர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிசிசிஐ ஆடுகள மேற்பார்வையாளரின் பாரமரிப்பில் பிட்ச்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக TNPL (தமிழ்நாடு பிரீமியர் லீக்), ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளை இந்த புதிய கிரிக்கெட் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் IPL போட்டிகளையும் நடத்தும் வகையில் மதுரை மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த தோனி, அங்கு பேட்டிங்கும் செய்தார். அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து தோனி மைதானத்தை சுற்றி பேட்டரி காரில் வலம் வந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முன்னதாக தோனி மைதானத்தை திறப்பதற்காக மதுரை விமான நிலையம் வந்தபோது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தல..தல.. என்று கூறி ரசிகர்கள் ஆரவாரமிட்டது குறிப்பிடத்தக்கது.