கரூரில் தவெக தலைவர் விஜய்யின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு கொடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடந்தவுடன் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் சென்னை கிளம்பி சென்றது விமர்சனத்தை உண்டாக்கியது. அதன்பின்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை அளித்த விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
24
வீட்டை விட்டு வெளியே வராத விஜய்
கரூர் சம்பவம் நடந்து 12 நாட்களுக்கும் மேலான நிலையில், தவெக தலைவர் விஜய் எப்போது பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பார் என பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தன் மீதான குற்ற உணர்ச்சியில் விஜய் தனது வீட்டில் பதுங்கியிருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்து இருந்தார்.
34
விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை
கரூர் சம்பவத்தில் விஜய்க்கு பாஜக ஆதரவாக இருக்கும் நிலையில், கரூரில் விஜய் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ''தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க கரூர் சென்றால் அவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
41 பேரை கொன்றது போல...
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதியே விஜய் அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம். விஜய் உயிருக்கு ஏதும் ஆபத்து விளைந்தால் என்ன செய்வது என யோசிக்க வேண்டும்? 41 பேரை அடித்து, மிதித்து கொன்றார்கள். அதே போல் அவரையும் ஏதாவது செய்து விட்டால் என்ன செய்ய முடியும். இதனால் தான் அவர் பாதுகாப்பு கேட்டுள்ளார். அரசு அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்''என்று தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் வரும் 13ம் தேதி கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தவெகவினர் டிஜிபியிடம் மனு அளித்தனர். விஜய் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்லும்போது தொண்டர்கள், ஊடகங்களுக்கு காவல்துறை அனுமதி கொடுக்கக் கூடாது.
விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் இடத்தை சுற்றி மக்கள், தொண்டர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று டிஜிபியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.