
கருணாநிதி என்ற உடனேயே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய எழுத்துக்கள் தான். அவர் இறுதிவரை இங்க் பேனாக்களையே பயன்படுத்தி வந்தார். இந்தியாவில் உற்பத்தியாகும் ‘Wality 69T’ என்கிற இங்க் பேனா தான் கருணாநிதியின் பேவரைட். நிறைய இங்க் ஊற்றும் வண்ணம் அளவில் பெரியதாகவும், இங்க் அளவு வெளியில் தெரியும் வண்ணம் கண்ணாடி அமைப்பில், வண்ண மூடிகளுடன் இந்த பேனா மிக அழகாக இருக்கும். இதன் விலை ஆரம்பத்தில் ரூ.150 என இருந்த நிலையில், கருணாநிதி மறைவுக்குப் பின்னர் பலரும் வாங்க தொடங்கியதால் தற்போது ரூ.1,000-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.
கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என்பதாலும், மஞ்சள் குரு பகவானுக்கு உகந்தது என்பதாலும் அவர் மஞ்சள் துண்டு அணிந்தார் என கூறுவதுண்டு. ஆனால் கூட்டணி பேச வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகவின் பிரதான நிறமான மஞ்சள் நிறத்துடன் கூடிய துண்டை கருணாநிதிக்கு அணிவித்தது முதல், அதை தன்னுடைய அடையாளமாக மாற்றிக்கொண்டார். அதற்கு முன்பு வரை பெரும்பாலும் வெள்ளை நிறத் துண்டுகளையே கருணாநிதி பயன்படுத்தி வந்தார்.
டெல்டா மாவட்டத்தில் பிறந்த கருணாநிதி விரும்பி சாப்பிட்டது விரால் மீன் குழம்பு தான். தனது மனைவி தயாளு வைக்கும் மீன் குழம்பு என்றால் அவருக்கு கொள்ளை விருப்பமாம். மற்ற இறைச்சிகளை விட மீன் மற்றும் கடல் உணவுகளை விரும்பி சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்தார். நாட்கள் செல்ல செல்ல, வயோதிகம் காரணமாக அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்தார்.
கருணாநிதி எப்போதும் தன் கையில் பவள மோதிரம் ஒன்றை அணிந்திருப்பார். கருணாநிதியின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்தது அந்த மோதிரம். திமுக முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கிய போது, பொருளாளராக இருந்த கருணாநிதி, தேர்தல் நிதியாக ரூ.11 லட்சம் திரட்டி கொடுத்ததற்காக அறிஞர் அண்ணா அளித்த பரிசு தான் அந்த பவளம் மோதிரம். கருணாநிதி இறக்கும் வரை அவரது கைகளில் அந்த மோதிரத்தை அணிந்திருந்தார்.
உடல் நிலையில் எப்பொழுதும் கவனத்துடன் இருக்கும் கருணாநிதி, உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர். தேர்தல் பிரச்சாரங்களின் போது கூட, ஹோட்டல்களில் சாப்பிடாமல் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டிற்குச் சென்று, அவர்கள் வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுவார். இருப்பினும் அண்ணா அறிவாலயம் அருகில் இருக்கும் ஆனந்த பவன் ஹோட்டல் போண்டா என்றால் அவருக்கு அதிக பிரியம். உதவியாளர்களை அடிக்கடி அனுப்பி போண்டா வாங்கி வரச் சொல்லி விரும்பி சாப்பிடுவாராம்.
கருணாநிதிக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. குறிப்பாக நாய்கள் மற்றும் மீன்கள் வளர்த்து வந்தார். ஓமாந்தூரார் அரசினர் வளாகத்தில் கட்டிய புதிய சட்டசபையில் சிறு நீச்சல் குளம் அமைத்து, அதில் மீன்கள் வளர்த்து வந்தார். தினமும் சட்டசபைக்கு வரும்போது மீன்களுக்கு உணவு அளித்துவிட்டு, அதை சில மணி அமர்ந்து நேரம் பார்த்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடும் கருணாநிதி, அண்ணா அறிவாலயத்தில் வாக்கிங் செல்வது வழக்கம். யோகாசனம், மூச்சுப் பயிற்சி செய்வது என்று உடல் நிலையை கவனித்துக் கொண்டார். இதுவே அவரின் ஆரோக்கியத்திற்கான ரகசியம். சக்கர நாற்காலிக்கு மாறியப் பின்னர் அவரால் பெரிய அளவில் உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ செய்ய முடியவில்லை.
கருணாநிதிக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றால் மிக பிடிக்கும். ஆலிவர் ரோடு இல்லத்தில் குடியிருந்தபோது பிளாக்கி என்னும் நாயை வளர்த்திருக்கிறார். அது இறந்த பின்னர் வீட்டு வாசலிலேயே புதைத்து அந்த இடத்தில் ஒரு செடியையும் வளர்த்திருக்கிறார். அதன் பின்னர் சில நாய்களை வளர்த்து வந்த அவர், பின்னர் நாய்கள் வளர்ப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.
கருணாநிதி வழக்கமாக அணிவது போல் அல்லாமல், பின்பக்கமாக கைக்கடிகாரம் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். ஆரம்பத்தில் கருப்பு நிறப் பட்டையில் கை கடிகாரம் அணிந்து வந்த அவர், பின்னர் சிகப்பு நிற பட்டையை அணிவதை வழக்கமாக்கி கொண்டார். பல கட்சித் தலைவர்களும் விலையுயர்ந்த கைக்கடிகாரம் அணியத் தொடங்கிய நிலையில், கருணாநிதி அதே பழைய மாடல் கைக்கடிகாரங்களையே அணிந்து வந்தார்.
வெளியூருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கிய கருணாநிதியின் இடது கண் பலத்த சேதமடைந்தது. இதற்காக அந்த கண்ணில் மட்டும் 12 முறை அறுவை சிகிச்சை செய்யப்படிருக்கிறது. அதன் பின்னர் தொடர்ந்து அவர் கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார். பின்னர் அதுவே அவர் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போனது. கண்ணாடி இல்லாமல் கருணாநிதியை பார்ப்பது என்பது அரிதான காரியங்களில் ஒன்று.
2005-ம் ஆண்டு முதுகு வலி காரணமாக, முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு, பின்னர் நடக்கவே முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர் சக்கர நாற்காலியிலேயே தொடர்ந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர் இறுதிவரை சக்கர நாற்காலியிலேயே பயணித்தார். 50 ஆண்டுகளாக இந்தியாவின் அரசியலை நிர்ணயித்த அந்த தலைவரின் சக்கர நாற்காலி அவருக்குப் பின்னர் நிரந்தர ஓய்வுக்குச் சென்றது.