கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட 6 மணி நேர விசாரணை நேற்று நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தற்போது தனி விமானத்தில் சென்னை புறப்பட்டார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
24
விசாரணை வளையத்தில் விஜய்
இந்நிலையில் கட்சியின் தலைவர் விஜய்யை விசாரணைக்கு உட்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகினார். விஜய்யிடம் தொடர்ந்து 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடைபெறுமென்று சொல்லப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளதால் பொங்கலை முன்னிட்டு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் ஒத்தி வைத்ததாக சொல்லப்படுகிறது.
34
விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகள்
கரூரில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி மிகவும் குறுகலானது என முன்கூட்டியே உங்களுக்கு தெரியுமா..?
பொதுமக்கள் மயங்கி விழுந்ததைப் பார்த்த பின்னரும் கட்சி தலைவரின் உரையாடல் தொடரப்பட்டதா?
பிரசார பகுதிக்கு வருவதாக திட்டமிடப்பட்ட நேரம் என்ன? சம்பவ இடத்திற்கு விஜய் வந்து சேர்ந்த நேரம் என்ன? உள்ளிட்ட பல அடுக்கடுக்கான கேள்விகள் விஜய்யிடம் முன்வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரிடம் 3 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விஜய்யிடம் ஒரே நாளில் விசாரணை நிறைவுபெற்றுவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையைக் காரணம் காட்டி விஜய்யிடம் நடத்தப்படும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்ததாக அவர் வருகின்ற 19ம் தேதி மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.