Published : Mar 27, 2025, 02:59 PM ISTUpdated : Mar 27, 2025, 03:28 PM IST
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஓரிரு இடங்களில் வெப்பம் உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஸ்ஹீட் வரையும், கடலோர மாவட்டங்களில் 95 டிகிரி ஃபாரன்ஸ்ஹீட் வெப்பநிலை பதிவானது. வேலூர், மதுரை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 3 டிகிரி மேல் வெப்பம் உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
26
சென்னை வானிலை மையம்
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 29 முதல் 31ம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் ஏப்ரல் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
46
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. மேலும் மார்ச் 29 முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மார்ச் 29 முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
66
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.