வருகின்ற 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விகே சசிகலாவை அடிக்கடி சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி விகே சசிகலா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் கட்சியின் விதிகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
25
பழனிசாமிக்கு எதிராக திரும்பிய செங்கோட்டையன்
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் தற்போது பழனிசாமிக்கு எதிராக திரும்பியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னாள் கட்சியை வலுப்படுத்த வேண்டும். கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரவேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
35
ஓரம் கட்டப்பட்ட செங்கோட்டையன்
ஆனால் இதனை துளியும் ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியில் இருந்து மெல்ல மெல்ல ஓரம் கட்டத் தொடங்கி உள்ளார். மேலும் கட்சியின் முக்கிய கூட்டங்களில் செங்கோட்டையனை புறக்கணிப்பது, அவர் கூட்டத்தில் பங்கேற்றாலும் அவரிடம் கருத்துகளை கேட்காமல் அவரை உதாசினப்படுத்துவது என தொடர்ந்து தனது அதிகாரத்தை நிலைநாட்டி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாம் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்த செங்கோட்டையனும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் விழாக்களை கடந்த சில மாதங்களாகவே புறக்கணித்து வந்தார். குறிப்பாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொங்கு மண்டலத்தில் தொடங்கிய நிலையில், அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. அதே போன்று அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
55
சசிகலாவுடன் நெருக்கம் காட்டும் செங்கோட்டையன்
இதனிடையே கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் செங்கோட்டையன், வருகின்ற 5ம் தேதி கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப்போவதாக தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை செங்கோட்டையன் அடிக்கடி சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது. 2 நாடாளுமன்ற தேர்தல், 1 சட்டமன்ற தேர்தல் என எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்து வந்துள்ளது. இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரிந்து சென்ற முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக.வை உருவாக்கும் முனைப்பில் செங்கோட்டையன் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை ஓரங்கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.