
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரண்டாவது திருமணம் செய்துள்ள தகவல் இணையத்தில் வெளியாகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமாதாஸின் 2வது திருமணம் திண்டிவனம் கிளினிக்கில் பணியாற்றிய செவிலியர் சுசீலாவுடன் நடந்தது என்று கூறப்படுகிறது. 66 வயதான சுசீலா ராமதாஸின் கிளினிக்கில் சேர்ந்தபோது 16 வயதாக இருந்ததாகவும், அப்போதே இரண்டாவது திருமணம் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது. இந்தத் திருமணம், ராமதாஸின் முதல் குடும்பத்திலிருந்து தனியாக, ரகசியமாக நடந்ததாகக் கருதப்படுகிறது.
2025 ஆகஸ்ட் மாதத்தில், சுசீலாவுடன் 50வது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிகழ்வு, சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 'கால்டன் சமுத்திரா' நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. புகைப்படங்களில், ராமதாஸ் மற்றும் சுசீலா சந்தோஷமாகக் காணப்படுகின்றனர். ஆனால் அவரது முதல் குடும்ப உறுப்பினர்கள் அதாவது அன்புமணி உள்ளிட்ட யாரும் இந்த நிகழ்வில் இல்லை.
பாமக உட்கட்சி மோதல்
ஏற்கெனவே பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதாஸின் 2வது திருமண புகைப்படங்கள் கசிந்தது பாமக உட்கட்சி மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சில தொண்டர்கள், இந்த உறவே அப்பா-மகன் இடையேயான பிரச்சினைகளுக்கு காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர். ராமதாஸ் தனது அரசியல் வாழ்க்கையில் சாதி ஒற்றுமை மற்றும் குடும்ப மதிப்புகளை வலியுறுத்தியவர்.
ஆனால் இந்த இரண்டாவது திருமணம், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. சுசீலாவுடன் அவரது உறவு, கிளினிக் காலத்தில் தொடங்கி, நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் மக்களிடம் இரட்டை வேடம் போட்டதாக பல்வேறூ தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். அதே வேளையில் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்று ராமதாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
புகைப்படம் எப்படி கசிந்தது?
இந்நிலையில், ராமதாசும், சுசீலாவும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அனைத்து செல்போன்களும் பிடுங்கி வைக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த புகைப்படம் எப்படி கசிந்தது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஹோட்டலில் தான் இந்த நிகழ்வு நடந்தது. சுமார் 200 பேர் விழாவில் பங்கேற்றிருந்தனர். அந்த விழாவை முன்னின்று நடத்தியவர் பாமக எம்.எல்.ஏ அருள். இந்த விழா குறித்து கேள்விப்பட்டதும் இதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கருதி ஜிகே மணி ஒதுங்கி சென்று உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த விழாவை நடத்தினால் ஒட்டுமொத்த கட்சியும் பாதிக்கப்படும் என்று எம்.எல்.ஏ அருளும் சிந்திக்கவில்லை. ராமதாசும் சிந்திக்கவில்லை. விழாவில் கலந்து கொண்ட அனைவரிடமும் அவர்களது செல்போன்கள் பிடுங்கி வைக்கப்பட்டிருந்தன. அப்படியானால் இந்த புகைபடத்தை யார் வெளியிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்புமணி ஏற்கெனவே ராமதாஸை சுற்றி சதிகாரர்கள் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இப்போது அது இந்த நிகழ்வின் மூலம் வெளிப்பட்டு விட்டதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இந்த நிகழ்வை எடுத்துக் கொண்டு அன்புமணி கட்சியினரிடம் பிரசாரம் செய்தால் அவர் பக்கமே அனைத்து தொண்டர்களும் செல்வார்கள் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.