சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-2ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகள் தொடங்கியுள்ளன.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல மணி நேரம் சாலைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் வேலைக்கு செல்பவர்கள் பல மணி நேரங்களுக்கு முன்னதாகவே புறப்பட வேண்டிய நிலையும் உள்ளது.
இந்த நிலையில் தான் சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையால் பெரும்பாலான மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். எனவே சென்னையில் பல்வேறு இடங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிகமாக ஐடி ஊழியர்கள் பயன்பெறும் வழித்தடமாக போரூர் - பூந்தமல்லி வழித்தடம் உள்ளது.
24
பூந்தமல்லி- போரூர் மெட்ரோ ரயில் சேவை
இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டமானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து விரைவில் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாகவும், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ இரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறும் பணிகள் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
34
மெட்ரோ ரயில்- பாதுகாப்பு சான்றிதழ்
இந்தச் சோதனைகள் இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு மூலம் நடத்தப்படுகின்றன. மெட்ரோ இரயில் பெட்டிகளுக்கான சான்றிதழைப் பெறுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி இந்தச் சோதனைகள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 16, 2025 முதல் இந்த சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அவை சுமார் இரண்டு வாரங்களுக்குத் தொடரும். இக்காலகட்டத்தில், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்படுகிறது.
அத்துடன், வழித்தடத்தில் இரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்படுகிறது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், புதிய வழித்தடம் மற்றும் மெட்ரோ இரயில்கள் பாதுகாப்பு தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யும். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் முன்னிலையில் பாதுகாப்புச் சான்றிதழ் சோதனைகள் நடைபெற்றன. இது தொடர்பாக மு.அ.சித்திக் கூறுகையில், 'இரண்டாம் கட்ட திட்டத்தின் முன்னேற்றத்தில், பாதுகாப்பு சான்றிதழ் சோதனைகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதைக் குறிக்கிறது.
பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வரையிலான இந்த வழித்தட பகுதி 1ஏ (viaduct Section IA). 9 நிமிடங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையின் மிக உயர்ந்த தரங்களை பூர்த்தி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என தெரிவித்தார்.