கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை சென்னை பக்கமே எட்டிப்பார்க்காத டிடிவி தினகரன் தான் முகமூடி அணிந்துகொண்டு மீண்டும் கட்சிக்குள் நுழைந்தார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. குறிப்பாக அமித்ஷாவை சந்தித்துவிட்டு நான் முகத்தை மூடிக்கொண்டு வெளியேறியதாக சிலர் சொல்கின்றனர். நான் கைகுட்டையால் முகத்தை துடைத்தபோது வீடியோ எடுத்து அதனை நான் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வருவதுபோல் போலி செய்தி பரப்பப்படுகிறது.
24
கட்சியை விட்டு நீக்கப்பட்ட டிடிவி தினகரன்
இதனை ஒரு விவகாரமாக எடுத்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூரில் நடந்த முப்பெரும் விழாவில் விமர்சிக்கிறார். நாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விசயங்கள் பல இருக்கின்றன. குறிப்பாக டிடிவி தினகரன் தன்னை முகமூடி அணிந்து வந்ததாக விமர்சித்துள்ளார். நான் முகமூடி அணிந்து வரவேண்டிய அவசியம் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கடந்த 19/12/2011 அன்று டிடிவி தினகரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் விடுவித்து உத்தரவிட்டார்.
34
ஜெ. இருந்த வரை சென்னை பக்கமே தலைகாட்டாதவர்
அதன் பின்னர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை சென்னை பக்கமே தலை காட்டாதவர் தான் டிடிவி தினகரன். அப்படிப்பட்ட தினகரன் ஜெயலலிதா மறைந்த பின்னர் இறுதிச்சடங்களில் கலந்து கொண்டார். பின்னர் அவர் தான் முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் கட்சிக்குள் நுழைந்தார். அப்படிப்பட்ட நபர் என்னை எப்படி விமர்சனம் செய்ய முடியும்?
மேலும் அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்த பாஜக தலைவர் அமித்ஷா பழனிசாமி தான் கூட்டணிக்கட்சி தலைவர் என்று வெளிப்படையாக அறிவித்தார். அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்த தினகரன் அடுத்த ஒரு வாரத்தில், நாங்கள் அதிமுக.வில் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையின் கீழ் நாங்கள் செயல்படுவோம் என்று தெரிவித்தார். ஆனால், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்தவுடன் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். அவர் என்ன நோக்கத்திற்காக அப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.