கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய ட்வீட் போட்டதால் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இப்போது அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பிறகு அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இந்திய இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் எதிராக எக்ஸ் தளத்தில் போட்ட ஒரு ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதாவது, 'சாலையில் நடந்து சென்றாலே தடியடி சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது செய்யும் அதிகாரத்துக்கு (திமுக அரசு) எதிராக இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், genz தலைமுறையும் ஒன்றாய் கூடி புரட்டி செய்ததுபோல் இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்'' என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.
24
காவல்துறை வழக்குப்பதிவு
ஜனநாயக நாடான இந்தியாவிலும், அமைதி பூங்காவான தமிழகத்திலும் வன்முறையை தூண்டுவதாக கூறி பலரும் கண்டனம் தெரிவித்ததால் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய ட்வீட்டை உடனே நீக்கினார்.
ஆனாலும் அந்த ட்வீட் தொடர்பாக காவல்துறைக்கு நிறைய புகார்கள் சென்றதால் ஆதவ் அர்ஜுனா மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆதவ் அர்ஜுனா உயர்நீதிமன்றம் சென்றார்.
காவல்துறை வாதம்
அப்போது காவல்துறை தரப்பில், ''ஆதவ் அர்ஜுனாவின் வன்முறையை தூண்டும் விதமான பதிவால் தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக அவர் பதிவு செய்துள்ளார். ஆகவே அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது'' என்று வாதிடப்பட்டது.
34
உள்நோக்கத்துடன் பதிவிடவில்லை
அதே வேளையில் ஆதவ் அர்ஜுனா தரப்பில், ''நான் பதிவு செய்த ட்வீட்டை உடனே நீக்கி விட்டதால் ஒரு சிலரே அந்த பதிவை பார்த்துள்ளனர். மேலும் நான் உள்நோக்கத்துடன் அதை பதிவிடவில்லை. அந்த பதிவால் தமிழகத்தில் எந்த பதட்டமோ, வன்முறையோ ஏற்படவில்லை. ஆகவே என் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் 21ம் தேதி (அதாவது இன்று) தீர்ப்பு வழங்குவதாக கூறியிருந்தனர். இந்த நிலையில், எந்த உள்நோக்கத்துடன் பதிவிடவில்லை என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளதால் அவர் மீதான வழக்கை அதிரடியாக ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஆதவ் அர்ஜுனாவுக்கு பெரும் நிம்மதியை வழங்கியுள்ளது.