விஜய் மீண்டும் சேலத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்க உள்ள நிலையில், தவெகவுக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கரூரில் சோக சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்கு பிறகு தவெக மீண்டும் வேகமாக செயல்படத் தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் சூட்டோடு சூட்டாக பொதுக்குழுவையும் கூட்டி கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்து விட்டார்.
கரூர் சம்பவத்துக்கு முன்பாக வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்ட விஜய், இனிமேல் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
24
சேலத்தில் பிரசாரம் செய்யும் விஜய்
விஜய் வரும் டிசம்பர் 4ம் தேதி (வியாழக்கிழமை) சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தவெகவினர் சேலம் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் திருவண்ணாமலை கோயில் பாதுகாப்புக்கு காவலர்கள் தேவை உள்ளது.
டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம், டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூடி இடிப்பு தினம் ஆகியவற்றை காரணம் காட்டி டிசம்பர் 4ம் தேதி அனுமதி தர முடியாது, அதற்கு பதிலாக வேறு தேதியை கேளுங்கள் என காவல்துறை கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.
34
தவெகவுக்கு காவல்துறை கண்டிஷன்
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது உயர்நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என சேலம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதாவது விஜய் பரப்புரைக்கு 4 வாரங்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும்.
அப்படி கேட்டால் தான் முறையாக ஏற்பாடுகள் செய்ய ஏதுவாக இருக்கும். பரப்புரைக்கு எவ்வளவு பேர் வருவார்கள்? என்பதை தெளிவாக குறிப்பிட்ட வேண்டும் என சேலம் காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.
மனுவில் அனைத்தும் தெளிவாக இருக்க வேண்டும்
மேலும் விஜய் பரப்புரைக்காக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். தவெக தலைவர் பரப்புரை செய்யும் இடம், அந்த இடத்தின் பரப்பளவு உள்ளிட்ட இடங்களை மனுவில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் சேலம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சேலத்தில் 4ம் தேதி விஜய் பிரசாரம் செய்ய சில நாட்களுக்கு முன்பு தான் தவெகவினர் காவல்துறையினர் அனுமதி கேட்டனர்.
இப்படி உடனடியாக அனுமதி கேட்க முடியாது. 4 வாரங்களுக்கு முன்பே அனுமதி கேட்டால் தான் ஏற்பாடுகளை செய்ய முடியும் என தவெக தலையில் காவல்துறை குட்டியுள்ளது.
கரூரில் அநியாயமாக 41 உயிர்களை பறிகொடுத்தோம். ஆகவே தவெகவினர் இனிமேலாவது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று அவசர கதியில் விஜய் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யாமல் நன்கு திட்டமிட்டு உயர்நீதிமன்றம், காவல்துறை உத்தரவுகளை பின்பற்றி ஏற்பாடு செய்தால் தான் கரூரை போல் இனி சோக சம்பவம் நடக்காமல் தடுக்க முடியும்.