
கிட்னி திருட்டு விவரகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீதான புகார்களின் அடிப்படையில், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மணச்சநல்லூர் திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்: திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, நில அபகரிப்பு, திமுக நிர்வாகிகளின் அடாவடி செயல்கள், திமுக நிர்வாகிகளால் அரசு ஊழியர்கள், காவல் துறையினர் தாக்கப்படுவது போன்றவை சர்வ சாதாரணமாக நடைபெறுவது வழக்கமாகும். விடியா திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் ஆட்சியில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றதாக, தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடியா திமுக ஆட்சி பதவியேற்று முதல் நெசவாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அதிக அளவு விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நெசவு வேலை இல்லாததால், புரோக்கர்கள் ஏழை விசைத்தறித் தொழிலாளர்களுடைய வறுமையைப் பயன்படுத்தியும், இலவச மருத்துவம் என்ற பெயரிலும், விசைத்தறித் தொழிலாளர்களை குறிவைத்து போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. புரோக்கர்கள் மூலம் நடைபெற்ற இந்த மோசடியை கொடூரமான செயல் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது.
மனித உறுப்பு மாற்று சட்டத்தை மீறிய புரோக்கர்கள், போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி இந்த கிட்னி திருட்டை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மற்றும் மருத்துவத் துறையின் மீதான நம்பிக்கையின்மையை இது வெளிப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற எனது எழுச்சிப் பயணத்தில், மணச்சநல்லூருக்குச் சென்றபோது கிட்னி திருட்டுபற்றி பேசினேன். அதிமுக 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன், கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளேன்.
ஏழை விசைத்தறித் தொழிலாளர்களிடமிருந்து கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும், திமுக நிர்வாகிக்கு சொந்தமான இந்த மருத்துவமனையின் மீதும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீதும், சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீதும், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கிட்னி திருட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து, திமுக நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையைப் பாதுகாக்க நினைக்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசைக் கண்டித்து, அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் வரும் 9ம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில், `சமயபுரம் நால்ரோடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிலை அருகில்’ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ. பரஞ்ஜோதி முன்னிலையிலும் நடைபெறும்.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பலதரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.