புஸ்ஸி ஆனந்த் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு! வசமாக வேட்டு வைத்த நீதிமன்றம்!

Published : Oct 03, 2025, 06:59 PM IST

கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இதனால் அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

PREV
15
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிபதி ஜோதிராமன் முன்பாக இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

25
புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்

"கூட்டத்தின் ஏற்பாட்டாளர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மட்டுமே. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். "எங்கள் தொண்டர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே தாமதமாக வந்தது" என்று முதல் தகவல் அறிக்கையில் (FIR) தவறான தகவல் உள்ளது. வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரியபோதே காவல்துறை மறுத்திருக்கலாம். கூட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால்தான் நெரிசல் ஏற்பட்டது. கரூரில் நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல, அது ஒரு விபத்துதான்." என புஸ்ஸி ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

35
தமிழ்நாடு அரசுத் தரப்பு வாதம்

“கரூர் சம்பவம் நடந்தவுடன் தவெக-வினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கூட்டத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு தவெக சார்பில் குடிநீர் கூட வழங்கப்படவில்லை. உடற்கூராய்வில், உயிரிழந்தவர்களில் பலர் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) காரணமாகவே இறந்திருப்பது தெரியவந்துள்ளது. நாமக்கல் விவகாரத்தில் ஒருவரின் ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது. விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால், இப்போது முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை நடத்துவது கடினம். எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது.” என தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

45
முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜோதிராமன், தனது தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

"கரூர் நெரிசல் வழக்கில் புஸ்ஸி ஆனந்த் 2-ம் குற்றவாளியாகவும், நிர்மல் குமார் 3-ம் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியைக் கொண்டு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தற்போது தொடக்க நிலையில் உள்ளது. எனவே, இந்தச் சூழ்நிலையில் முன்ஜாமீன் வழங்க இயலாது."

இதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

55
புஸ்ஸி ஆனந்த் கைதுக்கு வாய்ப்பு?

ஏற்கனவே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரைப் பிடிக்கக் காவல்துறை தனிப்படை அமைத்துள்ள நிலையில், தற்போது உயர் நீதிமன்றமும் அவர்களது முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்திருப்பதால், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories