கரூர் சம்பவத்துக்கு பிறகு முதன்முறையாக மீடியா வெளிச்சத்துக்கு வந்த விஜய், ஒரு வருத்தமோ அல்லது இறந்தவர்கள் குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் சென்றதை பத்திரிகையாளர் மணி விமர்சித்து உள்ளார்.
கரூரில் தவெக பரப்புரையில் விஜய் கலந்துகொண்டபோது, அவரைப் பார்க்க வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலி ஆனார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பின் 38 நாட்களாக அமைதி காத்து வந்த விஜய், கடந்த புதன்கிழமை அன்று தவெக-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் கரூர் சம்பவம் குறித்து அவர் எந்தவித வருத்தமும் தெரிவிக்காமல் இருந்ததை பத்திரிகையாளர் மணி கடுமையாக விமர்சித்து உள்ளார்.
24
வனவாசத்துக்கு பிறகு வெளியே வந்திருக்கிறார்
சமீபத்திய பேட்டியில் பத்திரிகையாளர் மணி பேசியதாவது : 38 நாட்கள் கழித்து மெளன விரதத்தை கலைத்திருக்கிறார். வனவாசத்துக்கு பிறகு வெளியே வந்திருக்கிறார். நடந்த சம்பவத்திற்காக குறைந்தபட்சம், ஒரு வருத்தம் தெரிவிக்கக் கூடிய பாங்கு என்பது அவரிடம் இல்லை. விஜய்க்கு குற்ற உணர்ச்சி கண்டிப்பாக இருக்கவேண்டும். ஏனெனில் இந்த சம்பவத்துக்கு விஜய்யும் ஒரு முக்கிய காரணம். நம்பர் 1 காரணம் விஜய், நம்பர் 2 பொதுமக்கள், நம்பர் 3 தான் அரசு. விஜய்க்கு இதில் முக்கிய பங்கு இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
34
விஜய் மீது தவறில்லை என்றால் எதற்காக மன்னிப்பு கேட்டார்
உங்க வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதாவது ஆச்சுனா, உங்களுக்கும் தார்மீக பொறுப்பு இருக்கும். அதுகூட விஜய்யிடம் இல்லை. அவர் பூட்டிய அறைக்குள் 9 மணியில் இருந்து 6 மணிவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். அவர்கள் காலில் விழுந்தார் என்றெல்லாம் செய்திகள் வந்தது. அவர் மீது எந்த தவறும் இல்லை என்றால், பின்னர் ஏன் அவர் பூட்டிய அறைக்குள் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பொதுக்குழுவில் விஜய் ஸ்பீச் பொறுத்தவரை, அரசியல் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அந்த சம்பவத்துக்காக தார்மீக பொறுப்புடன் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.
41 அப்பாவி உயிர்கள் போயிருக்கு. மனசாட்சி உள்ள ஒரு குடிமகனாக, இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்கக் கூடிய ஒரு மனசாட்சியும், குறைந்தபட்ச நேர்மையும் துரதிர்ஷ்டவசமாக விஜய்யிடம் இல்லை. அவர் முதல்வரை தாக்கி பேசுகிறார். உச்சநீதிமன்ற வழக்கில் உள்ளதையெல்லாம் எடுத்து பேசுகிறார். அதெல்லாம் சரி. பொதுவெளியில் ஒரு சம்பவம் நடந்திருப்பதால், அதற்கான மன்னிப்பையும் பொதுவெளியில் கேட்க வேண்டும். உங்களை பார்க்க தான் கூட்டம் கூடியது, எல்லா பழியையும் தூக்கி நீங்க எப்படி அரசாங்கத்தின் மீது போட முடியும் என சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார் மணி.