Published : Jul 21, 2025, 11:27 AM ISTUpdated : Jul 21, 2025, 11:30 AM IST
பாஜகவுடனான அதிமுக கூட்டணிக்குப் பிறகு மன உளைச்சலில் இருந்த அன்வர் ராஜா. அவரது உதவியாளர் மற்றும் திமுக நிர்வாகிகளின் தொடர் அழுத்தத்தால் திமுகவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர் அன்வர் ராஜா, ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்களை அதிமுகவிற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். பல்வேறு தேர்தல்களில் இஸ்லாமியர்கள் மக்களிடம் அதிமுகவின் திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளை கவர்ந்து வந்தார்.
2001-2006 தமிழ்நாடு அரசில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகப் பணியாற்றினார். 2014-2019 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து 16-வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு செயலாளராகவும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராகவும் பணியாற்றினார்.
24
அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்தது. இதனால் வாக்குகள் சிதறி அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக- பாஜக கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பாஜக தான் முக்கிய காரணம் என அன்வர் ராஜா பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். மேலும் இரட்டைத் தலைமைக்கு எதிராகவும் பேசியதால், கட்சி விதிகளை மீறியதாகக் கூறி 2021 நவம்பர் 30-ல் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து பாஜக - அதிமுக கூட்டணி முறிந்த நிலையில் 2023 ஆகஸ்ட் மாதம் அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார் அன்வர் ராஜா, மீண்டும் பாஜகவுடன் கூட்டணியே இல்லையென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வந்த நிலையில்,
34
திமுகவில் இணைந்த அன்வர் ராஜா
மீண்டும் தற்போது கூட்டணி உருவாகியுள்ளது. இதற்கு அதிமுகவில் உள்ள சிறுபான்மையின தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அன்வர் ராஜா நீண்ட நாட்களாகவே அதிமுக தலைமையோடு பாஜக இணைந்ததால் மன உளைச்சலோடும் இருந்து வந்தார். எனவே வேறு கட்சிக்கு செல்லலாமா என ஆலோசித்து வந்துள்ளார். இந்த சூழலில்தான் அன்வர் ராஜாவுடன் இருந்த ராமநாதபுரம் மாவட்ட முக்கிய நபர்களும் அவருடைய உதவியாளராக இருக்கும் அனீஸ் என்பவரும் திமுகவில் இணைய தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.
கடந்த இரண்டு வார காலமாகவே அன்வர் ராஜாவின் உதவியாளர் அனீஸ் திமுகவின் முக்கிய நிர்வாகிகளான அன்பகம் கலை மற்றும் பூச்சி முருகன் வீடுகளில் தென்பட்டு வந்தார். இதனையடுத்து தான் பூச்சி முருகன் மற்றும் அன்பகம் கலை ஆகியோர் அன்வர் ராஜாவிடம் தொடர்ந்து பேசி திமுக பக்கம் அழைத்து வந்துள்ளனர்.
அன்வர் ராஜாவை கட்சியில் சேர்க்கும் முன் ராஜ கண்ணப்பன் மற்றும் காதர் பாட்ஷா (எ)முத்துராமலிங்கத்துடனும் பேசி அவர்களையும் சமாதானம் செய்து கட்சிக்குள் அன்வர் ராஜாவை சேர்த்துள்ளார் அன்பகம் கலை, அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளதால் ராமநாதபுரம் பகுதியில் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கூடுதலாக திமுகவிற்கு கிடைக்க அதிக வாய்ப்பாக உள்ளது.