2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டியை வெளியிட்டது. இந்த நாட்காட்டியின்படி, பள்ளிகள் மொத்தம் 210 வேலை நாட்களுடன் செயல்படும் எனவும்,
அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 21 நாட்கள் பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய விடுமுறைகள் மற்றும் தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டது.
24
விடுமுறை இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்
இதனிடையே ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த நிலையில் தற்போது வரை மாணவர்களுக்கு வார விடுமுறையை தவிர்த்து கூடுதல் விடுமுறைகள் கிடைக்கவில்லை. எனவே மாணவர்கள் தினந்தோறும் காலண்டரில் விடுமுறை உள்ளதா என தேடி தேடி பார்த்து ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். ஆகஸ்ட் மாதம் மட்டுமே மாணவர்களுக்கு சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்படவுள்ளது. எனவே இடைப்பட்ட காலங்களில் எந்த விடுமுறையும் இல்லாத நிலை நீடித்து வருகிறது.
34
ஆடி அமாவாசை
இந்த நிலையில் ஆடி அமாவாசையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையானது இந்து மதத்தில் முக்கியமான நாளாக கருதப்படுகிறது, குறிப்பாக மறைந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு திதி, பிண்டம், தர்ப்பணம் போன்ற பூஜைகள் செய்யப்படும். எனவே ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல கடலோர பகுதிகளில் முன்னோர்களுக்காக பூஜைகள் செய்யப்படும்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி பல லட்சம் மக்கள் வெளியூரில் இருந்து கன்னியாகுமரியில் குவியவுள்ளனர். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்வி நிலையங்கள், அரசு அலுவலங்கள் விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஈடுகட்ட வரும் ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.