இன்னும் சற்று நேரத்தில் மனம் திறக்க உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் சாரை சாரையாகக் குவிந்து வருவதால் அதிமுகவில் பரபரப்பு உச்சம் அடைந்துள்ளது.
அதிமுக.வில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிந்த பின்னர் பல்வேறுகட்ட போராட்டங்களைக் கடந்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே அவருடன் இணைந்து பணியாற்றிய முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான கே.ஏ.செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளார்.
24
ஈபிஎஸ் தலைமையில் அனைத்து தேர்தல்களிலும் தோல்வி
கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என மிகப்பெரிய ஆளுமைகள் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் கட்சி வலுவிழந்து காணப்படுகிறது. இதே போன்று பல முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.கள் என பல மூத்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமையில் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியே பரிசாகக் கிடைத்துள்ளது.
34
மூத்த தலைவர்களை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையன்
அதிமுக.வின் தோல்வி வரிசைக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முடிவு கட்டியே தீரவேண்டும் என்று முடிவெடுத்த செங்கோட்டையன் பிரிந்து சென்ற அதிமுக முன்னாள் தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுக.வாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற முனைப்பில் செங்கோட்டையன் செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சில முன்னாள் அமைச்சர்களை சேர்த்துக் கொண்டு தனது யோசனையை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் செங்கோட்டையனின் கோரிக்கையை காது கொடுத்து கேட்கவே பழனிசாமி தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த செங்கோட்டையன் பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். இதனை நோட்டமிட்ட பழனிசாமியும் செங்கோட்டையனை கட்சியில் ஓரம் கட்டத் தொடங்கினார். இருவர் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில் செங்கோட்டையன் இன்று தனது அலுவலகத்தில் மனம் திறந்து பேசவுள்ளதாக அறிவித்துள்ளார். செங்கோட்டையனின் அறிவிப்பைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் லாரி, லோடு வாகனம், வேன், பேருந்து என சாரை சாரையாக அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.